இலங்கை சுதந்திரதினத்தை பகிஸ்கரிப்போம் – வட மாகாண காணமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு
எதிர்வரும்  மாதம் நான்காம் திகதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிப்போம் என வட மாகாண காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு இன்று தீர்மானம் எடுத்துள்ளது. அத்தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்துக்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களின் அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழு, ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். அத்தோடு  தாங்கள் மேலும் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அருட்தந்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதமர் காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அப்படி இறந்திருந்தால் இரானுவத்திடம் சரணடைந்த, ஓப்படைந்தவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எவ்வாறு இறந்தார்கள், மற்றும் முகாம்களிலும், வீடுகளிலும் வைத்து கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்ன நடந்தது அவ்வாறு அவர்கள் இறந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் யார்? அதற்கான நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் காணாமல் போனோரை தேடும் உறவுகள் மத்தியில் காணப்படுகிறது.
மேலும் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வதாக சுகாதார அமைச்சர் றாஜித சேனாரத்தின அவர்களின் கருத்தையும் காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு கண்டிக்கிறது. காணாமல் போன உறவுகளுக்கு எந்த நீதியும் கிடைக்காது இவ்வாறான நடவடிக்கைகளை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும்  இவ்வமைப்பு தீர்மானித்துள்ளதாக அருட்தந்தை செபமாலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மூன்றாவதாக பரணகம ஆணைக்குழுவின் கால நீடிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அந்த ஆணைக்குழுவை உடனடியாக கலைந்துவிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புடன் காணாமல் போனவர்களின் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வட மாகாண காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பைச் சேர்ந்த தலைவர் செயலலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகோண்டனர்.IMG_0297 copy IMG_0304 copy
Facebook Comments