இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் திட்டமிட்ட கொலை என்று கல்லூரியின் தாளாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி – சேலம் சாலையில் உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது.

இக்கல்லுரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேர் கடந்த 24ம் திகதி மாலை கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

3 பேரும் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவிகள் எழுதியதாக தற்கொலைக் கடிதம் கிடைத்தது.

எஸ்.வி.எஸ். கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி இவர்களின் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை கைது செய்தனர்.

கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை 3 நாட்கள் புழல் சிறையில் வைக்கவும், 28ம் திகதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்பு வாசுகியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது நீதிபதியிடம் வாசுகி அளித்த வாக்குமூலத்தில், இந்த வழக்கில் பொலிசார் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது இல்லை.

எங்கள் கல்லூரியை மூடி காட்டுகிறேன் என பொலிஸ் ஒருவர் சபதமிட்டார்.

மேலும், 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?

இந்த சம்பவத்தில் திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் பொலிசார் திசை திருப்பியுள்ளனர்.

அரைமணி நேரம் ஒதுக்கினால் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில் தகவல்கள் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் வாசுகி அங்கிருந்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் காவலில் வாசுகி விசாரிக்கப்பட்டால் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments