புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘பெரும்பான்மையின மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒரு இலக்குக்குள் சென்றுவிடக் கூடாதென்பதில் பல்வேறு சக்திகள் மிகக் கவனமாக உள்ளன. பெரும்பான்மையின மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுபட்டுவிட்டால், இந்த நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் இருக்காது.

இவ்வாறு பிரச்சினைகளின்றி இருந்தால், தங்களின் பிழைப்பு போய்விடுமென்று எண்ணுகின்ற பல சக்திகள் இருக்கின்றன. இனப் பிரச்சினைத் தீர்வுக்கான விடயங்கள் சரியான பாதையில் செல்லவிடாது அந்தச் சக்திகளே தடுக்கின்றன. அத்துடன், தீர்வு விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒத்துப்போகாது முரண்பட வேண்டுமென்றும் சிலர் செயற்படுகின்றனர்.

இவ்வாறானவர்களின் இலக்குக்குள் அகப்படாது ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழர்களிடம் உள்ளது என்றார். ‘ஜனாதிபதி முறையில் மற்றும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே பெரும்பான்மையினருக்கு தேவையாகக் காணப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்குள்ள பெரும்பான்மைப் பலத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்ற முடியும்.

நாங்கள் உருவாக்கவுள்ள அரசியல் தீர்வுத் திட்டமானது ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நீதியானதும் நிலைத்திருக்கக்கூடியதும் செயற்படுத்தக் கூடியதுமான ஒரு தீர்வுத்திட்டமாக அமைய வேண்டும். இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துதற்கு சம்பந்தப்பட்ட மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம். அதன் அடிப்படையில் எங்களுடைய அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செல்லக்கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது’

எனவும் அவர் மேலும் கூறினார்.tha_the_kootam_ 1 tha_the_kootam_ 2 tha_the_kootam_ 3 tha_the_kootam_ 4 tha_the_kootam_ 6

Facebook Comments