கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 4,000 ஏக்கரில் இடைப்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுவதால், கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை செய்வதில்லையென முன்னர் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, காலபோக நெற்செய்கையின் அறுவடையானது ஆரம்பித்துள்ளது. காலபோக நெற்செய்கை அறுவடை செய்யப்பட்ட, ஈரமான நிலப்பரப்பில் இடைக்கால போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தனியான ஒரு போகமாகச் செய்கை பண்ணப்படுகின்றது’ எனக் கூறினார். அதனையடுத்து, இது தொடர்பில் தனக்கு முன்னரே ஏன் அறிவிக்கவில்லையெனவும், எவ்வாறு மானிய உரம் உள்ளிட்ட விடயங்களை செய்ய முடியும் என மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுதாகரன், ‘சிறுபோகம் இம்முறை செய்யப்படவில்லை. ஈர நிலத்தில் செய்கை பண்ணுவதற்கான இந்த 4,000 ஏக்கரும் செய்கை பண்ணப்படுகின்றது. முன்னரே அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டமைக்கு மன்னிப்பு கோருகின்றேன்’ என்று கூறினார்.

Facebook Comments