கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளருமான ப.அரியரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் 110 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த பாடசாலைகள் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் 6 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

பிரதானமாக கட்டட வளங்கள் போதாமல் காணப்படுகின்றது. தற்போதும் ஓலையால் வேயப்பட்ட கொட்டிகைகளிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் நிலவுகின்றது. இதேவேளை ஆசிரியர் பற்றாக்குறை மற்றுமொரு பிரச்சினையாக காணப்படுகின்றது. வடமாகாணத்தில் உள்ள ஏனைய வலயங்களை விட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் வலயங்களில் இந்த நிலைமை அதிகரித்துள்ளது.

இதற்கு பிரதான காரணம் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பட்டதாரிகளாக ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் மற்றும் க.பொ.த உ/த பரீட்சையில் சித்தி எய்தி ஆசிரியர் நியமனம் பெற்றவர்களினதும் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் வெளிமாவட்டங்களிலிருந்து இடமாற்றத்தின் பேரில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு நியமிக்கப்படுவோர் சில காலங்கள் இங்கு கடமையாற்றுவதுடன், தமது ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பிவிடுகின்றனர்.

இதனால் மாணவர்கள் தொடர்ச்சியாக ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்க முடியாத நிலை நிலவுகின்றது. இது தவிர இந்த ஆசிரியர்கள் உரிய காலத்தில் தமது விடுமுறையை எடுத்துக்கொள்வதனால் மாணவர்கள் பரீட்சை நேரங்களில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அரியரத்தினம் கவலை வெளியிட்டார்.

Facebook Comments