சட்டத்தை அமுல்ப்படுத்துகின்றவர்களே அதனை மீற வேண்டாம்…
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கின்றார் அமைச்சர் டெனிஸ்வரன்…
மன்னார் பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி கடலுக்கு சென்ற வேளை, அங்கே கடற்ப்படையினரால் தாக்கப்பட்டு இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சூழ்நிலையில் சட்டத்தை அமுல்ப்படுத்துபவர்களே அதனை மீறும் ஓர் நடவடிக்கையாக இது அமைவதாகவும், அத்தோடு தாக்கப்பட்ட அந்த மீனவர்கள் சிலவேளை சட்ட முரணான தொழிலில் ஈடுபட்டிருப்பின் அவர்களைக் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை பெற்றுக்கொடுப்பதே ஓர் சட்டத்தைக் காக்கும் அமைப்பினரின் கடமையாக இருக்கும் என்றும், இவ்வாறான கடற்ப்படையினரின் தான்தோன்றித்தனமான செயலை கண்டு மக்கள் மிகவும் விசனம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கடற்ப்படையின் உயர் அதிகாரிகள் சம்பவத்தை ஆராய்ந்து சட்டத்தை கையில் எடுத்த தரப்பினருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வருங்காலத்தில் இவ்வாறான செயற்ப்பாடுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு கடந்த செவ்வாய் 16-02-2016 மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகியோர் இணைந்து  இந்த சம்பவத்தை கண்டித்து நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் திரு.என்.எம்.ஆழம் அவர்களும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் திரு.ஏ.யேசுதாஸ் மற்றும் மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் ஆகியோர் இணைந்து மன்னாரில் உள்ள வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் அலுவலகத்தில் அவரை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஓர் மகஜரையும் வழங்கிவைத்தனர், இதன்போது வடக்கு மீன்பிடி அமைச்சர் அந்த சமயத்திலேயே இலங்கை இராஜாங்கப் பாதுகாப்பு அமைச்சர் அவர்களிடம் அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் தெரியப்படுத்தியதாகவும், அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக தாம் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாகவும் வடக்கு மீன்பிடி அமைச்சர் தெரிவித்தார்
Facebook Comments