கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாளைய தினம் வட மாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்ரிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வட மாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா. டெனிஸ்வரன்.
மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் குறிப்பாக புங்குடுதீவில் இதே போன்று சம்பவம் நடைபெற்று ஒரு மாணவியை இழந்து நிற்கின்றோம். அதே போன்று சம்பவம் தற்போது வவுனியாவிலும் நடைபெற்றுள்ளது. அத்தகைய காமுகர்களுக்கு சட்டத்தில் இருக்கின்ற அதி உச்ச பட்ச தண்டனையினை பெற்று கொடுப்பதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை விரைவு படுத்துமாறு நாளைய தினம் (24.02.2016) நடைபெற இருக்கும் ஹர்த்தாலை விழிப்புணர்வோடு மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஏனெனில் கடந்த காலங்களில் பொது அமைப்புக்களாலும் மக்களாலும் நடாத்தபட்ட கவனஈர்ப்பு போராட்டங்கள் திசைமாறி சென்று, நீதி கேட்க சென்ற எல்லோரும் இறுதியில் சட்ட முரணான செயலில் ஈடுபட்டு தற்பொழுது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எமது இலக்கு கொடூரமான இச் செயற்பாடுகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கு சரியாக வழிநடாத்தப் படாமையினால் திசை மாறி இருக்கின்றது. எனவே அன்பான பொது மக்களே ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்த சாத்வீகப் போராட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆகவே எம் சிறுமிகளை பாதுகாக்க வேண்டுமெனில் பொது மக்கள் பொறுப்புடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு பாடுபட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்து நிற்கின்றார்.

Facebook Comments