கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு  கூட்டத்தின்  இரண்டாம்  அமர்வு  இன்று நடை பெற்றபோது   கிளிநொச்சி ஒரு நகர அமைப்பு முறைகளுடன் கூடிய பெரு நகராக வளர்ச்சியடைய வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதற்குரிய கட்டுமானங்களுடன் அமைக்கக்கூடிய வகையில் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு அமைவாக நகர திட்டமிடல் உருவாக்கப்படும் போது இதற்கு தடையாக அரச செயலகங்கள் பொது இடங்கள் என 40 வீதமான நிலத்தில் இராணுவம் தங்கியிருப்பதால் நகர அபிவிருத்தி சாத்தியமற்றது என புத்திஜீவிகள் என சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துரைத்த இணைத்தலைவர் சிறீதரன் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் பொருட்டு இராணுவம் இங்கு விவசாய செய்கையில் ஈடுபடுகிறது. உற்பத்தி பொருட்களை குறைந்த விலையில் விற்று விவசாயிகளுக்கு தீங்கிழைக்கிறது.

கரும்புத் தோட்ட வயல்களை குத்தகைக்கு விட்டு வருமானம் சேர்க்கிறது. உணவகங்களை நடத்துகிறது. முன்பள்ளிகளை நடத்துகிறது. முன்பள்ளி ஆசிரியர்களை இராணுவமயப்படுத்தி வைத்திருக்கிறது.

பாடசாலைகளுக்கருகே இராணுவம் குடியிருக்கிறது. சகல காரியங்களிலும் இராணுவ தலையீடுகள் குறைந்த பாடில்லை. நல்லாட்சி நடப்பதாக நாடகமாடுகிறார்கள். இங்கு நல்லாட்சியுமில்லை ஐனநாயக ஆட்சியும் இல்லை. இங்கு இராணுவ ஆட்சியே நிகழ்கின்றது என்பதை இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டவற்றிலிருந்து வெளிப்படுகிறது.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் நகர உருவாக்கம் கல்வி, விவசாய அபிவிருத்தி என்பவை நிகழ வேண்டுமென்றால் இராணுவம் நகரத்திலிருந்து வெளியேற வேண்டுமென முன்மொழிகிறேன் என்றார்.

இதனை வழிமொழிந்து பேசிய முதலைமைச்சர் விக்னேஸ்வரன், சிறீதரனின்  முன்மொழிவை ஏற்று அங்கீகரித்து வழிமொழிகிறேன் இது தொடர்பில் ஆட்சியாளர்களோடும் இங்கு வருகை தருகின்ற பிறநாட்டு இராஐதந்திரிகளோடும், மனித உரிமை நிறுவனங்களோடும் பேசி வருகின்றேன்.

இத்தகைய நிலைமை தொடரக்கூடாது. அனுமதிக்கவும் முடியாது. இங்குள்ள அரச ஊழியர்கள் இராணுவத்தின் சேவகர்களாக அல்லாது மக்களின் சேவகர்களாக மாறி துணிவோடும் தெளிவோடும் பணிபுரிகின்ற போதே இக்காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்றார்.

SN.NIBOJAN

T.P:0094766222409

    0094710122052

Thank You

Facebook Comments