இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.

புதிய அரசியலமைப்புக்கான கருத்துகளை, வரைபை அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அமைப்புகள் முன்வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கும் அப்பால் புதிய அரசியலமைப்புக்கென மக்களின் கருத்துகளை, யோசனைகளை கேட்டறிவதற்கெனவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு, மலையகம் சார்ந்த அரசியல்கட்சிகளின் சார்பில் இதுவரை புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் தரப்புக்கூட இந்த விடயம் குறித்து மௌனம் சாதித்து வருகின்றது.

முஸ்லிம் தரப்பை விடுத்து வடக்குஇ கிழக்கு மலையகம் சார்ந்த பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடனான ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதாவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதில்லை என்பதே அந்த உடன்பாடாகும். இந்த உடன்பாட்டுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கம் கொடுப்பதை ஏற்றுக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த அனைத்து அரசியல் கட்சிகளினதும் நிலைப்பாடாகும்.

ஒட்டுமொத்தமாக இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் மறைந்த கரம் அதாவது, “பெரியண்ணன்’ இருப்பதாக அறிய முடிகின்றது.

எனவே தான் அனைத்துதத் தரப்பினரும் புதிய அரசியல் அமைப்புக்கென தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் குறித்து தற்பொழுது ஒப்புக்காகவே பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் இந்தக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் பிரவேசம் பெரும் அதிர்வலையையை உருவாக்கி விட்டது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்த தமிழரசுக் கட்சி பெரும் தடுமாற்றத்திற்குள்ளாகியுள்ளது.

தமிழரசுக் கட்சி சார்ந்தோர் தமிழ் மக்கள் பேரவை குறித்து மோசமான கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்ததேனரேயன்றி ஆக்கபூர்வமாக அர்த்த புஷ்டியுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து தமது நகர்வுகள் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் குறித்து கருத்துகளை முன்வைக்க முன்வரவில்லை.

தமிழ் மக்கள் பேரவை சமஷ்டி குறித்துப் பேசத் தொடங்கவே தமிழரசுக் கட்சியும் சமஷ்டி குறித்துப் பேசத் தொடங்கியது. அதுவரை நல்லாட்சி அரசாங்கத்தில் எமக்குப் பூரண நம்பிக்கையுண்டு.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றேம். 2016 ஆம்ஆண்டு இனவிவகாரத் தீர்வில் ஒரு திருப்புமுனையாக அமையும். தீர்வு நிச்சயம் வரும். என்றெல்லாம் கூட்டமைப்பின் சார்பில் குறிப்பாக தமிழரசுக் கட்சி வடக்கிலும் கிழக்கிலும் தெரிவித்து வந்தது.

ஆனால் உண்மையில் கூட்டமைப்பிடமோ, அல்லது கூட்டமைப்பில் பெரும் செல்வாக்கும் அதிகாரமும் படைத்த தமிழரசுக் கட்சியிடமோ புதிய அரசியல் அமைப்புக்கான யோசனைப் பொதி எதுவும் இல்லை.

தமது கையறு நிலையை மறைப்பதற்காகவே தமிழ்மக்கள் பேரவை மீது வசைபாடியது. அது மாத்திரமல்ல, தமிழ் மக்கள் பேரவையை சில வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் முடக்கிவிட பல்வேறு நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இவை பரமரகசியமல்ல.

இந்தத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் அமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைபை மக்கள் முன் வைத்துள்ளது.

அந்த வரைபு தற்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தமிழ் மக்கள் பேரவை தான் ஒரு அரசியல் கட்சியல்ல என்பதை உறுதிப்படுத்தியதுடன் மக்களின் சார்பில் கூட்டமைப்பின் கைகளில் ஒரு வரைபு யோசனையை கையளித்துள்ளது.

இனிமேல் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளதென்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் தீர்வுப் பொதியை முன்வைக்க வேண்டுமென இப்பத்தியாளர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் முன்வைத்து வந்த போதும் தமிழ்த் தலைமைகளில் ஒருசிலருக்கும் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஒருவருக்கும் இது ஒரு கசப்பான விடயமாகவே இருந்தது.

இந்தப் பத்தியாளரின் பேனாவையே ஒரு சில வருடங்களுக்கு முடக்கி வைப்பதில் கூட “பெரியண்ணனை’ப் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.

இதுபோன்றதொரு கைங்கரியத்தில்தான் இந்த சக்திகள் அதே பாணியை தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராகவும் களத்தில் இறங்கி இன்று தோற்றுப் போய் நிற்கின்றனர்.

தமிழரசுக் கட்சியினர் 2016ஆம்ஆண்டு தீர்வுவரும், திருப்புமுனையாக அமையும் என்று கூறிய போதும் அந்தத் திருப்பு முனை என்பது குறித்த ஒரு வெளிப்படைத் தன்மை இல்லை.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல் விடயத்தில் தொடர்ந்தும் மாயவித்தையையே காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஜெனீவா விவகாரம் தலைதூக்கியிருந்த போது அரசாங்கத் தரப்புடன் என்ன பேசுகின்றோம் என்பதை மூடுமந்திரமாக்கி 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசாங்கத்தை ஜெனீவாவில் காப்பாற்றிய அதேவேளை தமிழ் மக்களுக்கு தோல்விக்கு மேல் தோல்வி கொடுத்தனர்.

அதுபோல்தான் தற்போதும் ஜெனீவா விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக நல்லாட்சி அரசாங்கத்தின் நலன்களுக்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கமும் வழமையான “சிங்களப் பாணியில்’ பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஜெனீவா விவகாரத்தை வேறுவிதமாக அணுகுவதற்கான பொறிமுறை குறித்து மிக ஆழமாகவே சிந்தித்து வருகின்றது.

மறுபுறம் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சிக்குள்ளேயே அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பிரதமர் கூறும் ஒற்றையாட்சித் தத்துவத்திற்கு கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர் என்பதை நல்லாட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணம் ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அந்த ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பரிமாறப்பட்ட கடிதத் தொடர்புகள் மூலம் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைக்கு இணக்கம் கண்டுள்ளது.

இந்தக் கடிதப் பரிமாற்றலில்,

1. ஒரு பரீட்சார்த்தமான முறையிலான சமஷ்டி ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

2. தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்தும் பேசப்படவில்லை. இதற்கும் மேலாக இந்தியா கொண்டுள்ள அரைகுறை சமஷ்டி முறை போன்ற பரிந்துரைகள் கூட இடம்பெறவில்லை. அதாவது இந்தியாவில் உள்ள கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற வரையறுக்கப்பட்ட மாநில சுயாட்சி குறித்தும் பேசப்படவில்லை.

3. வடக்குஇ கிழக்கு இணைப்புப் பற்றி குறிப்பிடப்படவில்லை.

4. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரமும் பேசப்படவில்லை.

5. தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்திற்காக கடந்த 60 வருடங்களாக போராடி வந்தபோதும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் பேசப்படவில்லை.

இது வடக்கு கிழக்கு குறித்த விடயங்களாக இருக்கும் அதேவேளையில் மலையக மக்கள் குறித்து புதிய அரசியலமைப்பு வரைபில் எவ்வித ஏற்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

மலையகக் கட்சிகளை வளைத்துப் போடுவதில் நல்லாட்சி அரசாங்கம் மிக வெற்றிகரமாக காய்களை நகர்த்தியுள்ளது. எதிரும் புதிருமான அமைப்புகளை தனக்குக் கீழ் வைத்துக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் மிக மோசமான அடக்கு ஒடுக்குமுறைக்கும் இன ஒதுக்கல் வாதத்திற்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து புதிய அரசியலமைப்பில் என்ன பேசவேண்டும் என்பது குறித்துக் கூட எவ்வித பிரக்ஞையும் இன்றி மலையகக் கட்சிகள் இருப்பது வேதனை தருவதாகும்.

மலையகத்திற்கென தனி அலகு குறித்து பேசிய மலையக மக்கள் முன்னணி கூட மௌனம் சாதித்து வருகின்றது. பெரிதாக ஒன்றும் கேட்கக்கூடாது.

பிரதேச சபைகள்இ பிரதேச செயலகங்களுடன் மலையக மக்களின் உரிமைகளை அடக்கிக் கொள்ள இந்த அமைப்புகள் தயாராக இருப்பதாவே கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மலையகத்திலுள்ள சிவில் சமூகங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை ஓரளவாவது இனங்கண்டு யோசனைகளை முன்வைத்துள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அந்த யோசனைகளை ஒன்று திரட்டி ஒரு பொதுவான யோசனைகளாக முன்வைப்பதற்காவது மலையக அமைப்புகள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மலையக மக்களின் சார்பில் இந்தப் பத்தி மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு மீண்டும் தமிழ் பேசும் மக்களை ஓரம் கட்டி பயணிக்க முயலும் போது இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் எத்தகைய பாத்திரத்தை வகிக்கப் போகின்றன என்பதை தமிழ் பேசும் மக்களுக்கு தெளிவு படுத்தியாக வேண்டும்.

மொத்தத்தில் “பெரும்பான்மையின ஜனநாயகம்’ இலங்கை மண்ணில் மேலும் ஆழமாக வேரூன்ற புதிய அரசியலமைப்பு உறுதியானதும் இறுதியானதுமான ஒரு அடித்தளத்தை இடுவாதகவே அமைந்துள்ளது.

மறுபுறம் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் கல்லறைக்குள் சங்கமமாவதுடன் இந்த மக்களின் இருப்பு சுயகௌரவம், பாதுகாப்பு என்பன மீண்டும் ஒருமுறை படுகொலைக்கு உள்ளாக்கப்படப் போகின்றது.

இதற்கு தமிழ் பேசும் தலைமைத்துவங்கள் துணை போகவேண்டுமா?

வி.தேவராஜா

Facebook Comments