வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவி தொடர்பிலான சம்பவம் சமூக – அரசியல் மட்டத்தில் அதீத கவனத்தினைப் பெற்றதாக காணப்படவில்லை.

ஓப்பீட்டளவில் புங்குடுதீவில் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த வித்தியாவின் சம்பவம் தொடர்பில் ஏற்பட்டிருந்த அதீத அவதானிப்பு ஹரிஸ்ணவி விவகாரத்தில் குறைவானதாகவே காணப்பட்டது.

குறிப்பாக வித்தியாவின் சம்பவ விவகாரத்தில் பல்வேறு தமிழர் அரசியற் பிரமுகர்கள் காட்டியிருந்த ஈடுபாட்டின் பின்னால் தேர்தல் அரசியல் இருந்ததென்ற கருத்தும் பல மட்டங்களில் முன்வைக்கப்பட்டது.

இதேபோல் புலம்பெயர் தேசங்களில் வித்தியாவினை மையப்படுத்தி நடந்த வணக்க நிகழ்வுகள், புங்குடுதீவு ஊர் சங்கங்களை மையப்படுத்தி ஊரோடு தொடர்புபட்ட விடயமாக கையாளப்பட்டு இருந்ததனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிலையில், ஹரிஸ்ணவி விவகாரத்தில் அவ்வாறான தேவை குறித்து பேசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாக தொடரும் இச்சம்பவங்களுக்கு பின்னால் உள்ள காரணிகளை ஆழமாக சிந்திப்பதே ஆகும்.

யாழில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு’ ‘குழு மோதல் வாள்வெட்டில் முடிந்தது’ என தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வெளிவருகின்ற செய்திகளை வெறும் செய்திகளாக தமிழ்சமூகம் கடந்து செல்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இசைப்பிரியாவின் படுகொலைக்கு நீதி கோருபவர்கள் வித்தியா – ஹரிஸ்ணவி சம்பவங்களுக்கு ஏன் நீதி கோரவில்லை என்ற பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரிப்பட்டிருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்ததது.

இசைப்பிரியாவின் சம்பவம் என்பது தமிழர் தாயகத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் இனவழிப்பு போரின் முக்கிய ஆதாரமாக இது அமைந்திருந்தது மட்டுமல்ல, வெளிவந்த சான்றுகள் இதனை அனைத்துலக மயப்படுத்தியிருந்தது.

இது தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அனைத்துலக மயப்படுத்தியது.

ஆனால் வித்தியா – ஹரிஸ்ணவி சம்பவங்களை தமிழ்சமூகத்தின் அகத்தில் இருந்தே சிந்திக்க வேண்டியுள்ளது.

சமகாலத்தில் ‘நல்லாட்சியின் நாயகியாக’ தமிழர் தாயகத்தில் வலம் வருகின்ற, அன்று சமாதான தேவதையாக வர்ணிக்கப்பட்ட சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் (1990களில்) புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாரதாம்பாளின் சம்பவத்துக்கும், செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும், தற்போது வித்தியா – ஹரிஸ்ணவி சம்பவங்களுக்கும் அக – புற காரணிகள் வெவ்வேறானதாக உள்ளன.

சந்திரிகா ஆட்சிக்கால சம்பவங்கள் நேரடியாக சிறிலங்கா படைத்தரப்பை தொடர்புபட்டிருந்தது.

ஆனால் சமகாலச் சம்பவங்கள் சிறிலங்கா படைத்தரப்பின் நேரடி தொடர்பு அற்றதாக இருப்பினும், ஆழமாக உற்று நோக்கினால் தமிழர் பகுதிகள் மீதான சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக இருக்கின்றது.

ஓர் ஆக்கிரமிப்பு இராணுவம், தான் ஆக்கிரமிப்புச் செய்த பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்திடையே எத்தகைய நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஓர் அரசு, தனக்கு எதிராக, அளப்பரிய உயிர்த் தியாகங்களுடன் போரிட்ட ஓர் தலைமுறை, மீண்டும் உயிர்த்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் என்பதனை உலக வல்லாதிக்க சக்திகளின் நடத்தைகள் ஊடாக எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அவ்வாறே தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள அரச கட்டமைப்பு, தனது இராணுவ பிரசன்னம் ஊடாக மட்மல்ல, தனது அனைத்து அரச இயந்திரங்கள் ஊடாகவும் இவ்விடயத்தில் தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகின்றது என்பதன் வெளிபாடுகளாகவே ‘யாழில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு’ ‘குழு மோதல் வாள்வெட்டில் முடிந்தது’ போன்ற செய்திகள் ஊடாக புரிந்து கொள்ள முடிகின்றது.

இது ஆக்கிரமிப்பாளர்களின் ஓர் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றதெனில், தமிழர்களுக்கு இது பெரும் சமூகப்பிரச்சனையாக இருக்கின்றது.

தேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது என்பது அரசியற் பிரச்சனை, ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தில் நடந்தேறும் இவைகள் சமூகப்பிரச்சனை என்றவகையில் நாம் பிரச்சனைகளை அந்தந்த தளங்களில் கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

2009ம் ஆண்டு இறுதிப் போரின் ஓய்வுக்கு பின்னராக, தமிழர் தாயகம் நோக்கிய சிறிலங்கா அரசின் அபிவிரித்தி என்பது வீதிகளை,அடுக்குமாடிக் கட்டிடங்களை மட்டும் கொண்டு சேர்க்கவில்லை.

கூடவே, கைதொலைபேசி, இணையம், பற்பரிமாண தொலைக்காட்சி சேவைகள், மதுபானசாலைகள், பாலியல் திரைக்கூடங்கள், மசாச் கிளப்புகள், போதைப்பொருட்கள் என நன்கு திட்டமிட்ட வகையில் இளந்தலைமுறையினரை நோக்கி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

மரபுரீதியான வாழ்வியல் சமூக கட்டமைப்பினைக் கொண்ட மக்கள் கூட்டத்திடையே சடுதியாக வந்து சேர்ந்த இவைகள் எல்லாம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது என்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

யாழ்பாணத்தில் போதைக்கு அடிமையாகியுள்ள பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர் சிவன் சுதன் தெரிவித்த கூற்று,

இலங்கையின் அதிக மதுபான பாவனை கொண்ட பகுதிகளில் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட இடங்களைக் கடந்து யாழ்ப்பாணமே முன்னணியில் இருக்கின்றது என்ற புள்ளிவிபரம் , இளந்தலைமுறையினரின் பொதுப்புத்தியினை திசைதிருப்பி அவர்களை ஓர் களியாட்ட மனநிலையில், வளர்த்தெடுக்கின்ற அல்ல வைத்திருக்கின்ற நிலையினை அவதானிக்க முடியும்.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தேசத்தில் எழுந்துள்ள இச்சமூகப்பிரச்சனையினை, அங்கு வாழ்கின்ற தமிழ்சமூகம் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழ்சமூகமும் எவ்வாறு கையாளப் போகின்றது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

புறத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுக்கும் நாம், சமாந்திரமாக அகத்தில் எழுந்துள்ள இச்சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண, நிலத்திலும் – புகலிடத்திலும் வாழுகின்ற தமிழ்சமூகம் கூட்டாக சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

இவ்விடத்தில், தாயகத்தின் ஊர்களை மையப்படுத்தி புலம்பெயர் தேசங்களில் செயற்படுகின்ற ஊர் சங்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற பெரும்பாலான ஊர் சங்கங்கள் தங்களது ஊரில் உள்ள கோவில்களை மையப்படுத்தியே இயங்குகின்ற என்ற குற்றச்சாட்டுக்களும் பலமாக உள்ளன.

இக்குற்றச்சாட்டுக்களை கடந்து, சமகாலத்தில் சமூகம் எதிர்கொள்கின்ற சவால்களை மதிப்பீடு செய்து, தெளிவானதொரு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயலாற்ற வேண்டியுள்ளது.

வாசகசாலை மட்டத்தில், கலையாற்றுகை வெளியில், விளையாட்டுத்துறையில் என பல்வேறு சமூகத்தளங்களில் இளந்தலைமுறையினரை வளபடுத்துவதற்கான களங்களை திறக்க வேண்டும். இது தொடர்பிலான விழிப்பினை ஏற்படுத்தும் பொருட்டு நிலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் சமூக மட்டத்திலான உரையாடல் களத்தினை திறக்க வேண்டும்.

இதுவே ஹரிஸ்ணவி தொடர்பிலான சம்பவம் மீண்டும் நமக்கு உணர்த்துகின்ற பாடம்.

சுதன்ராஜ்

Facebook Comments