கண்டாவைளை பிரதேச செயலக பிரிவில் காணியற்று வாழ்கின்ற மக்களுக்கு காணிகளை இனம் கண்டு வழங்குவதற்கு கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு பிரதேச செயலாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய் கிழமை 01-03-2016 கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தருமபுரம் நெசவு நிலைய மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் காணியற்ற மக்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு கண்டாவளை பிரதேசத்தில்  காணிகள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படல் வேண்டும். அவ்வாறு கண்டாவளை பிரதேசத்தில் காணிகள் இல்லையெனில் வேறு  பிரதேச செயலக பிரிவுகளில்  அந்தந்த பிரதேச செயலாளர்களுடன் பேசி காணிகள் இனம் காணப்பட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளருக்கு கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்குவதாக இணைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைஎம்சிஏ காணி,கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்  அரிசி ஆலை காணி,புளியம்பொக்கனை சந்தி காணி இரானுவத்திடம் இருந்து மீளப் பெறப்படல் வேண்டும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், காணி, மின்சாரம்,விவசாயம்,நீர்ப்பாசனம், கால்நடை, கல்வி, சுகாதாரம், வீதி  அபிவிருத்தி, உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இதன் போது மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வாரு விடயங்களிலும் தங்களது கிராமமும், மக்களும்  எதிர்கொள்கின்ற தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வனை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வட மாகாண கல்வி அமைச்சர்  த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், தவநாதன்,பசுபதிபிள்ளை,  மற்றும்  திணைக்களங்களின் அதிகாரிகள்  மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Facebook Comments