கிளிநொச்சி பூநகரியில் உள்ள விக்கினேஸ்வரா பாடசாலைக் காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். குறித்த முகாமை விட்டு வெளியேறுமாறு மக்கள் கோரிக்கை வைத்து வந்துள்ள நிலையில் தற்போது இராணுவ முகாமை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை பாடசாலையின் ஆரம்ப பிரிவு மற்றும் நுண்கலைக் கல்லூரி வளாகம் என்பனவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதேவேளை இந்தப் பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அருகில் உள்ள பாடசாலைக்கும் ஆபத்துள்ளது.

இதேவேளை இராணுவத்தினர் தொடர்ந்தும் அப் பகுதியில் பாதுகாப்பு வேலிகளை அமைத்தல் புதிய கட்டடங்களை கட்டுதல் என இராணுவ முகாமை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பாடசாலை இராணுவ ஆக்கிரமிப்பில் அல்லது இராணுவச் சூழலில் இருப்பதனால் பாடசாலையின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நல்லாட்சி நிலவுவதாக கூறும் அரசாங்கம் பூநகரி விக்கினேஸ்வரா பாடசாலை வளாகத்தில் இருந்து வெளியேறி மாணவர்களின் இடையூறற்ற கல்விச் செயற்பாடுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோருகின்றனர்.

Facebook Comments