இலங்கை டி20 அணியின் தலைவர் பதவியை ஏற்க தான் மனரீதியாக தயாராக இல்லை என்று மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை டி20 அணியின் தலைவராக இருந்த மலிங்கா, காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.

இதனால் எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவரான மேத்யூஸ் டி20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து மேத்யூஸ் கூறுகையில், “சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணிக்கு தலைவராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு.

இதனால் மலிங்கா, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், என்னை டி20 அணியின் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி கூறினார்கள்.

ஆனால் நான் மனரீதியாக தலைவர் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை. இருப்பினும் என்னால் மறுக்கவும் முடியவில்லை.

தவிர, எனது அணியோ அல்லது தேசமோ பின்னடைவுக்கு தள்ளப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்த முழு முயற்சியை வெளிப்படுத்துவேன்.

தற்போது இந்த உலகக்கிண்ண தொடருக்கு மட்டும் தலைவராக இருக்க சம்மதித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Facebook Comments