2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று யுத்த ரீதியில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அரச தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நேர்காணலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

இந்த நேர்காணலின், கேட்கப்பட்ட முக்கியமான  வினாக்களுக்கு வழங்கிய பதில்களின் தொகுப்பு:

நாட்டு மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். நானும் அமைச்சராகவிருந்த கடந்த ஆட்சியின் முன்னாள் ஜனாதிபதிக்கு, உத்தியோகபூர்வமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்த பின்னணியிலும், அவர் எதற்காக தேர்தலைப் பிரகடனப்படுத்தினார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி தேர்தலைப் பிரகடனப்படுத்தாதிருந்தால், முன்னாள் ஜனாதிபதியே தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

ஆயினும், முன்னைய அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க ஓர் அமைச்சராக இருந்த நான் அறிந்தவகையில், முன்னாள் ஆட்சியாளருக்கும் அவரது சகாக்களுக்கும், நம் நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் முகம் கொடுக்க நேர்ந்திருந்த சில முக்கிய சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

விடை காண முடியாத அவ்வாறான பிரச்சினைகளுக்கு விடை காணும் வகையில், அவசர தேர்தல் ஒன்றைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் அவர்களால் எடுக்கப்பட்டது.

சில விடயங்கள், ஜெனீவா வரை சர்வதேசமயமானது. அதே கேள்விகளுக்கான பதிலென்ன என சர்வதேசம் எம்மிடம் வினவியது. அத்தோடு, யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த குழுவினர்கள் பல வழிகளிலும் சர்வதேசமயப்படுத்தினர்.

படைவீரர்களுக்குப் பங்கம் விளைவிக்கப்படுகிறது என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால், சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டுமாயின், எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு, உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுகளிலிருந்து மீள வேண்டும்.

அக்குற்றச்சாட்டுகளில் இருந்து மீளும் வகையில், ஏதேனும் ஓர் இடத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை வழங்குவது சரியா அல்லது எமது நாட்டுக்காகப் பாடுபட்ட, நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றிய அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது படையினர் மீது அவதூறுகளைச் சுமத்துவதற்கு இடமளிப்பது சரியா அல்லது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கீர்த்திமிக்க முப்படைகளாக எமது படைகளின் பெயர்களைத் தக்கவைத்துக் கொள்வதா?

யுத்தகாலம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக எமது படையினருக்கு எத்தனை பயிற்சி வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காவால் எமது படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சியினை இழக்க நேரிட்டது.

இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பல பயிற்சிகளை இழக்க நேர்ந்தது.

எமது புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின், அவ்வாறு இழக்க நேர்ந்த வாய்ப்புகளை மீண்டும் எமது படையினருக்குப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. உலக தரத்திலான பயிற்சிகளை, அனுபவங்களை, அறிவினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு, இப்போது எமது படையினருக்குக் கிடைக்கப் பெற்று வருகிறது.

முதலில் நான் குறிப்பிட்ட அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் எந்த ஒரு விசாரணையும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டவையல்ல.

எக்னெலிகொட சம்பவத்தை எடுத்துக் கொண்டால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவமாகும். ஆகையால், அதன் உண்மை நிலையை அறிவதற்காக விசாரணையினை ஆரம்பிக்க நேர்ந்தது.

விசாரணை அவ்வாறு முன்னோக்கிச் செல்லும் போதே, அச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற வகையில் படையினர் சிலர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டி வந்துள்ளது. விசாரணை முடிவில் அப்படைவீரர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்பது நிரூபணமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி நியாயமான விசாரணைகளைக் கோரும் உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் பதிலளிக்க வேண்டியது, அரசின் கடமையாகும். அவ்வாறு பதிலளிப்பதன் மூலம், களங்கமற்ற தன்மையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே, ஒரு நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்..

26 வருடங்களுக்கு அதிகமாக யுத்தத்துக்கு  முகம் கொடுத்து வந்திருப்பதுடன், பெரும்பாலும் யுத்த வெற்றி பற்றியே கதைத்தும் வருகின்றோம். அப்படியிருந்த போதும், யுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது பற்றி, இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சரியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின்,  அதுவே பிரச்சினையாக அமைகின்றது. 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி  புலிகள் அமைப்பு, யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டது.

அவ்வாறு எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்ட போதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன்.

இந்நிலைமையை, நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேற்கூறிய புலிகளின் தனி ஈழத்துக்கான கருத்து என்பதை, துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்.

தனிநாட்டுக்கான கோரிக்கையைச் செயலிழக்கச் செய்ய வேண்டுமாயின், இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

அந்த வகையில், இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாம் எடுத்து வரும் முயற்சிகளைத் தடுக்கவோ, நாம் இந்த நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கின்றோம் என்பவர்களோ, நாட்டைப் பலவீனப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்களோ, மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Facebook Comments