கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது.

மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினராகவும், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆளுநர் விஸ்வரூபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு எஸ்.கே.அறிவுச்சோலையின் பிரதான பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் எஸ்.கே.அறிவுச்சோலை கட்டடத்தினையும் திறந்து வைத்தனர்.

இந்த திறப்பு விழாவின் போது, பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி எட்டு ஏ ஒரு பி பெற்ற பாடசாலை மாணவி ஜெயராஜ் ஜெனர்த்தனிக்கு தளபாட உதவி வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆளுநர் விஸ்வரூபன் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

குறித்த சிறுவர் இல்லத்திற்கான முழுப்பணிகளையும் சுவிட்ஸர்லாந்தில் உள்ள வர்த்தகர் சுப்பிரமணியன் கதிர்காமநாதன் (Zurich SKT நாதன் கடை) அவர்களின் முயற்சியால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டதுடன் 2012இல் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் ஒன்றிணையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2009ஆம் ஆண்டு யுத்த மௌனிப்பிற்குப் பிற்பாடு அல்லலுறும் தமிழ் மக்கள் பலரின் வாழ்க்கை மேம்பட பல சமூகப் பணிகளை செய்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்

Facebook Comments