போதைப்பொருள் கலாசாரம் வடக்கை ஆட்கொண்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தின் போதும் தலை நிமிர்ந்திருந்த தமிழர்கள் தற்போது தலைக்குனியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டார்.

முரசுமோட்டை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திறப்பு விழா  (செவ்வாய்க்கிழமை) மாதர்சங்கப் பொருளாளர் விஜிதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘உலகத்திலே பழமையான சிறந்த கலாச்சார வரலாற்றுப் பின்னணிகளை கொண்ட தமிழர்கள் தமது நிலையான சுபீட்சமான வாழ்விற்காக சந்தித்த போராட்டங்கள் அளப்பரியன. சுதந்திரத்துக்காக ஏங்கிய மக்கள் அதற்காக பல விலைகளை கொடுத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்தின் மௌனிப்புக்கு பிறகும் உயிர் கொடைகளுக்கு பிறகும் தங்கள் மண்ணில் தமக்கேயுரிய தனித்துவ கலாச்சார அம்சங்களோடு கூடிய வாழ்க்கையை தொடர்கின்றபோது அவ்வாழ்க்கை முறைகளை சீரழிப்பதில் பலர் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

தமிழ் கலாச்சாரத்தை சிதைத்து தமிழ் இனத்தின் தனித்துவங்களை அடியோடு அழித்து உலக அரங்கிலே எம்மினம் பற்றிய இழிநிலையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை மிகக்கச்சிதமாக அரங்கேற்றிவருகிறார்கள்.

போருக்குப்பின்னரான சூழலில் எம்மக்களின் வறுமை, இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை இவற்றை சாதகமாக பயன்படுத்தி போதை பொருள் வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் பலரை உருவாக்கியுள்ளார்கள்.

இதைவிட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உயிர் விலை கொடுத்து எம்மவர்களால் காப்பாற்றப்பட்ட கலாச்சார அம்சங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றமை பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

போர் உக்கிரமடைந்த வேளையில் கூட தலை நிமிர்ந்து எதிர்கொண்ட நாம் இப்பொழுது மெல்ல மெல்ல கலாச்சார அழிவுகளில் இருந்து மீண்டெழ முடியாமல் தவிக்கிறோம்.

பத்திரிகை பக்கங்களை புரட்டுகிற போது யாழ்,குடாநாடு உட்பட தமிழர் பிரதேசங்கள் போதை பொருள் கடத்தல்களில் முன்னணி பெற்று நிற்கின்ற செய்திகளையே நாளாந்தம் காண்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வீர வாசகத்தை மகுடமாக கொண்டு எங்கள் இனத்தின் முன்னால் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து கலாச்சார சீரழிப்புகளுக்கும் போதைப்பொருள் பாவனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழர்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

5d62c141-1d50-4f68-85d6-570e4db9b7c5 8f171288-d885-47ac-9974-15d101d3e59a

Facebook Comments