கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தட்டுவான்கொட்டிக் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பின்தங்கிய கிராமம் ஆகும். ஏ-9 வீதிக்கு அண்மையில் இருந்தாலும் இந்தக் கிராமம் ஒரு பின் தங்கிய கிராமமாகவே இன்னமும் இருக்கிறது.

99குடும்பங்களைச் சேர்ந்த 347பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கல்வி, அடிப்படைவசதி, குடிநீர், போக்குவரத்து என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த மக்கள் 1980களின் இறுதிப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுக்க மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போரினால் பெரும்பாலான காலங்கள் தமது சொந்த நிலத்தை விட்டு அகதிகளாக பல்வேறு பிரதேசங்களிலும் அலைந்த மக்கள், தற்போது மீள்குடியேறி ஆறு வருடங்கள் ஆகின்றன. எனினும் இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பின் நிற்கின்றனர்.

பழமைமிக்க இந்தக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான மார்க்கமான ஆணையிறவு – தட்டுவான்கொட்டி வீதி இன்று வரை புனரமைக்கப்பாடம் மண் வீதியாகவே காணப்படுகின்றது. இதேவேளை கரைச்சிப் பிரதேச சபை குடிநீரை விநியோகிக்கின்றபோதும் அது போதுமானதாக இல்லை என்று கூறும் மக்கள் தாம் தொடர்ந்தும் தாகத்தில் அவதியுறுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மண் வீதியாக காணப்படும் ஆணையிறவு – தட்டுவான்கொட்டி வீதியின் நிலைமை காரணமாக போக்குவரத்து பிரச்சினையால் குடிநீர் சீராக இடம்பெறுவதில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். தமது கிராமத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்று கோருகின்றனர் தட்டுவான்கொட்டி கிராம மக்கள்.

Facebook Comments