கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையிலான போக்குவரத்துப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து பூநகரிக்கு செல்வது என்பது பெரும் நெருக்கடி மிக்க பயணமாகவே காணப்படுகின்றது.

குறிப்பிட்ட சில பேருந்துகள் மாத்திரமே கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகிறது. இதனால் அவசரத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையே கடந்த சில வருடங்களாக நீடித்து வருகிறது.

அன்றாட தேவைகளுக்காக புறப்படும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், ஏனைய தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இதனால் சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும் குறிப்பிடுகின்றனர். குறிப்பிடத்தக்க பேருந்துகளில் பெரும் நெரிசலிலேயே பயணம் மேற்கொள்ளுகின்றனர்.

பெரும்பாலும் மண் ஏற்றும் டிப்பர்களிலேயே அவசரத்திற்கு மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளுகின்றனர். வீதிகள் நன்கு செப்பனிடப்பட்டுள்ளன. அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து மன்னார் செல்லுபவர்கள் பூநகரி ஊடாக பயணிக்கின்றனர்.

மன்னார் – பூநகரி – யாழ்ப்பாணம் ஊடாக பேருந்து சேவைகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. எனவே  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து மன்னார் செல்லுபவர்கள் இலகுவாக பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையிலான போக்குவரத்துப் பிரச்சினை காரணமாகவே இப் பயணம் சிரமங்களுக்கு உள்ளாகின்றது.

எனவே முக்கியத்துவம் மிக்க கிளிநொச்சி – பூநகரி போக்குவரத்துப் பாதையில் அதிகளவான பேருந்துகளை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்வர்கள் கூறுகின்றனர்.

Facebook Comments