தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச மற்றும் தனியார் துறையினர், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தங்களின் விடுதலைக்காக ஒன்றுதிரண்டு உலகெங்கும் தங்களின் அடையாளத்தை முரசறையும் மே நாளில் நாமும் நமது உணர்வுகளால் ஒன்றிணைவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேதின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேநாளில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் குரலில் வெளிப்படுத்த வேண்டியவையாக, இன ஒடுக்குமுறையை எதிர்ப்பதையும் இனங்களுக்கிடையிலே பன்மைத்தன்மையை சமனிலைப்படுத்தப்பட்ட நீதியின் அடிப்படையில் உறுதி செய்வதையும் கோருவோம்.

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவோம். பால் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒடுக்கப்படும்,பிற்படுத்தப்படும் அநீதியை எதிர்ப்போம்.

அரச அதிகாரம் என்பது படையதிகாரமாகப் பரந்திருக்கும் நிலையை எதிர்ப்போம். எதுவும் மக்கள் மயமாதலை ஆதரிப்போம். ஜனநாயக விழுமியங்களைப் பலப்படுத்துவதை வலியுறுத்தி ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளில் இருந்து கூட்டுரிமை வரை அனைத்தையும் வலியுறுத்திப் பெறுவோம்.

அரசியற் கைதிகளின் விடுதலை, வடக்குக் கிழக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டிருக்கும் படையினர் விலகுதல், காணாமற்போரின் பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காணுதல், வேலையில்லாப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்தல் என எமது மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு விரைந்த தீர்வைப் பெறுவோம்.

இதிலெல்லாம் நாம் ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முனைவோம். தமிழ் பேசும் மக்கள் தங்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தில் அளவற்ற தியாகங்களைச் செய்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பெண்களும் சிறார்களும் தங்களின் உச்சமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்.

உன்னதமான விடுதலைக்காகச் சிந்தப்பட்ட குருதி, சமூக ஏற்றத் தாழ்வுகளையும் மனிதர்களுக்கிடையிலான மேல், கீழ் நிலைகளையும் மாற்றியமைத்திருக்க வேண்டும்.

பால் ரீதியான ஒடுக்கு முறைகளையும் விலக்கல்களையும் நீக்கியிருக்க வேண்டும். சாதிய அடையாளங்கள் இல்லாமலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான மாற்றங்கள் முழுமையான அளவில் நடக்கவில்லை என்பது கவலைக்குரியதே.

அதையெல்லாம் நாம் எமது சீரிய சமூக அரசியற் செயற்பாடுகளின் மூலமாக மாற்றியமைப்போம். ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சிந்தனைப் புரட்சியை எமது செயல்களாலும் சிந்தனையாலும் உண்டாக்குவோம்.

இன்று எழுச்சி கொள்ளும் அனைத்து உழைப்பாளர்களோடும் ஒடுக்கப்பட்டோரோடும் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் இணைந்து கொள்கிறோம். தொடர் செயற்பாட்டினால் வெல்லும் வரை போராடுவோம். வெற்றியென்பது அனைவருக்குமான விடுதலை என்போம் என அவர் வெளியிட்டுள்ள மேதினச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments