மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு முடிவடைவதற்குள் மேலும் 10 எழுச்சிக் கிராமங்களை உருவாக்கி, வறிய மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி காமாட்சிக் கிராமத்தில் எழுச்சிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிரமாணிக்கப்பட்ட இலங்கையின் 6 வது எழுச்சிக் கிராமமாகும்.

இவ்வீடுகளுக்கான அடிக்கல் கடந்த ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியினால் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான குடியிருப்பாளர்களுள் ஒவ்வொருவருக்கும் அரச காணி 15 பேர்ச்சஸ் வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடன் நிதி உதவியையும் வழங்கியிருந்தது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் சஜித் பிறேமதாஸ தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டு மக்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் இருந்து கிடைக்கும் நன்மைகளையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் 2025ம் ஆண்டாகும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்கள் என்கின்ற நிலைமை இல்லாதளவுக்கு வீடமைத்துக் கொடுப்பதிலே நாம் அக்கறை எடுத்துள்ளோம்.

மக்களுக்கு தேவை இருக்கின்ற இடத்தில்தான் சேவை செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட ஒரு இலட்ச ரூபாவுக்கு மேலதிகமாக அந்த வீடுகளை முழுமையாகத் திருத்தம் செய்வதற்கான உதவி வழங்கப்படும்.

இவ்வாறு பத்தாயிரம் வீடுகளை முழுமையாகத் திருத்தம் செய்வதற்கான இந்த உதவிகளை வழங்க முயற்சிகளை எடுத்துள்ளோம் என்றார்.

நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் பயனாளிக் குடும்பங்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Facebook Comments