கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி பெற்ற குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 32). இவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹரிவாசா (3) என்ற பெண் குழந்தை இருந்தது. சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு திவ்யா, தனது குழந்தையுடன் கோவை செல்வபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கோவையில் உள்ள ஒரு கடையில் திவ்யா வேலைக்கு சேர்ந்தார். இதில் திவ்யாவுக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கழுத்தை இறுக்கி கொலை
இந்த விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திவ்யாவை அழைத்து புத்திமதி கூறினார்கள். கணவனுடன் சேர்ந்து வாழாமல் இப்படி சுற்றுகிறாயே? ஒரு குழந்தைக்கு தாயான பின்பு இதுபோல் வேறொரு வாலிபருடன் தொடர்பு வைக்கலாமா? என்று கண்டித்தனர்.

ஆனாலும் கள்ளக்காதலனை திவ்யாவால் மறக்க முடியவில்லை. தனது கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் தானே, இந்த நிலை தனக்கு ஏற்படுகிறது. ஆகவே அதை கொலை செய்வது என்ற விபரீத முடிவுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் குழந்தை ஹரிவாசாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

குழந்தை தூங்குவதுபோல்
பின்னர் குழந்தையை கட்டிலில் தூங்குவதுபோல் வைத்துவிட்டு சென்றார். ஹரிவாசா அசைவின்றி கிடந்ததை பார்த்த, திவ்யாவின் தம்பி, அதன் அருகே சென்று பார்த்தபோது குழந்தை மூச்சு, பேச்சின்றி கிடந்தது தெரியவந்தது. உடனே குழந்தையை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதன் கழுத்தில் துணியால் இறுக்கிய தடயம் இருந்தது. தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திவ்யாவிடம் விசாரணை நடத்தினர்.

தாய் கைது
விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால், துருவித்துருவி விசாரித்தனர். இதில் திவ்யா, குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Facebook Comments