என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முதலாவது மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வுகள் இன்றைய தினம் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் அங்கு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியானது வரலாற்றில் தடம் பதித்த மகத்துவமான பல மனிதர்களைத் தந்த, சந்தித்த ஒரு சிறந்த கல்லூரியாகத் திகழ்கின்றது.

யோகர் சுவாமிகள் இந்தக் கல்லூரிக்குள் கால்பதித்த வரலாற்றினையும் அப்புஜீ அவர்கள் இக்கல்லூரிக்கு அதிபராக இருந்த வரலாற்றினையும் கொண்டுள்ளது.

சர்வதேச விருதைப் பெற்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி போன்ற சிறந்த மனிதர்கள் கல்வி கற்ற கல்லூரியாகவும் இக்கல்லூரி திகழ்கின்றது.

இக்கல்லூரியில் நான் ஒரு மாணவனாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், 1985ஆம் ஆண்டு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினுடைய தலைவர் பழநெடுமாறன் அவர்கள் இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடைய மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வழிநடத்தலில் இக்கல்லூரிக்கு வருகை தந்திருந்தார்.

அப்போது அவர் எங்களிடம், இக்கல்லூரியும் இக்கல்லூரி மாணவர்களும் தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்திலே எப்படியான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

இக்கல்லூரியின் புதல்வர்கள் பலர் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தம்மாலான பங்களிப்பைச் செய்து தம்மையே கொடையாக்கி இடம்பிடித்த மாவீரர்களாக நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பது வரலாறு.

வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ள இக்கல்லூரியில் கல்வி கற்றதை நினைத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதையிட்டும் நான் பெருமைப்படுகின்றேன்.

இங்கு நடைபெற்ற மாணவர் பாராளுமன்றமானது மிகவும் சிறப்பாக இருந்தது. இப்பாராளுமன்ற உறுப்பினர்களான மாணவர்கள் கலந்துகொண்டு மிகவும் அருமையான விவாதங்களையும் தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தார்கள்.

இக்கல்லூரியினுடைய மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் சிறப்பாக அமைவதற்கு இக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களது வழிநடத்தல்கள் மிகவும் சிறந்த முறையில் உள்ளது என்பதனை வெளிக்காட்டுகின்றது.

இன்றைய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் நாளை உலகத்தை ஆளக்கூடிய தலைவர்களாக திகழ்வீர்கள்.

அத்திறமை உங்களிடம் நிறைந்து காணப்படுகின்றது. உங்களது செயற்பாடுகள் வெற்றிபெற உங்களுடன் கூட இருந்து உங்களுக்கான பணிகளை எம்மால் இயன்றவரை செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.விக்னராஜா, ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலை அதிபர் உமாசங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Facebook Comments