கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து போராட்டத்தை வெற்றி கொள்ள உதவுமாறு தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலாலுக்கு அழைப்பு விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

தென் மாகாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.

அத்தோடு நாட்டை இரண்டாக பிளவுப்படுத்த போகின்றனர்.யாரை சிறையில் அடைத்தாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம்.

அரசாங்கம் எங்களை பழிவாங்குகிறது.பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன.

இதனால், ஷான் விஜேலால் எம்முடன் இணைந்து எமது வெற்றிக்கு உதவுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால்,கிறிஷ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபாவை பெற்றதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை பழிவாங்கல் என்கின்றனர் இதில் என்ன பழிவாங்கல் இருக்கின்றது.

கொள்ளை, மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுததினால், அது பழிவாங்கலாம்.

இது எப்படி பழிவாங்கலாகும் என ஷான் விஜேலால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியில் அங்கம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments