கடலை மற்றும் பருப்பு வகைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் அடிப்படையில் விற்பனை செய்ய முடியாது என சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தினால் 16 பொருட்ளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைசூர் பருப்பை மட்டும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கிலோ 169 ரூபா என்ற விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட முடியும்.

எனினும், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றை இந்த நிர்ணய விலையின் அடிப்படையில் விற்பனை செய்ய முடியாது.

இந்த வகை பருப்புக்களின் மொத்த விற்பனை விலை 210 ரூபாவாகும்.

ஒரு கிலோ பருப்பு 169 ரூபாவிற்கு விற்பனை செய்யாத அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிர்ணய விலையின் அடிப்படையில் பருப்பு விற்பனை செய்ய முடியாது. உலக சந்தையில் கடலையின் விலை உயர்வடைந்துள்ளது.

ஒரு கிலோ கிராம் கடலையின் மொத்த விற்பனை விலை 290 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் ஒரு கிலோ கிராம் கடலையை 260 ரூபாவிற்கு எவ்வாறு விற்பனை செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments