நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அரசாங்கத்துக்கு 1.8 பில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றத்தில் கோப் குழுவின் முன் தமது சாட்சியத்தை வழங்கவுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம், காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மின்சாரசபை, நிலக்கரி விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமது சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளனர்.

நிலக்கரி மெற்றிக்தொன் ஒன்று 51 டொலர்களுக்கு கேள்விப்பத்திர அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டபோதும் கணக்காய்வாளர் நாயகம் 58 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துக்கு 1.8 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளதாக அவர் கூறுவதாகவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

 

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இன்று பாராளுமன்றில் சிறப்புரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலக்கரி மோசடி தொடர்பில் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய உரையாற்றவுள்ளார்.

கடந்த வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நாமல் தனது கைதுகள் தொடர்பில் பல காரணங்களை முன்வைத்து இன்று உரையாற்றவுள்ளார்.

நிலக்கரி கொள்வனவின் போது கடந்த கால ஆட்சியில் 18903 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளமை, கொள்வனவு செய்யப்பட்ட விதம் உள்ளிட்டவை தொடர்பில் மின்சக்தி அமைச்சர், பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.

இதேவேளை தனது கைது மற்றும் கைதுக்கு பின்னரான சமூகங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஸ இன்று விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் நாமலும், அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வாய்மூல கேள்விக்கு பதிலளிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook Comments