ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுடன் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலானது ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகும் திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமைகளை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது கருத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய தேர்தல் முறையின் கீழ் இனிவரும் தேர்தல்களுக்கு தயாராவது குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அமைந்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

புதிய தொகுதிவாரி அடிப்படையில் 2017 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்- ஜனாதிபதி

புதிய தொகுதிகளின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் எதிர்வரும் வருட முதல் காலாண்டில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தக்கூட்டம் நேற்று இரவு இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதன்போது உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் கட்சிக்குள் கொண்டு வரவேண்டிய உள்ளக மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்தக்கலந்துரையாடலில் கட்சியின் போசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பங்கேற்றார்.

Facebook Comments