வேறு ஒரு ஆண் நண்பருடன் ஊர் சுற்றிய காதலியை குத்திக்கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் கொலை
பால்கர் மாவட்டம் விரார் மேற்கு, கோல்டன் ஓக் பகுதியை சேர்ந்த இளம்பெண் கின்ஜால்(வயது21). கடந்த திங்கட்கிழமை வெளியே சென்று வருவதாக கூறிச்சென்ற கின்ஜால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கின்ஜாலின் பெற்றோர் மகளை காணவில்லை என அர்னாலா கோஸ்டல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கின்ஜாலை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கோல்டன் ஓக் பகுதியில் உள்ள புதரில் கின்ஜால் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் கின்ஜாலின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கின்ஜாலை அவரது காதலன் நாலசோப்ரா, மோரேகாவ் பகுதியை சேர்ந்த தேவேந்திரா(23) என்பவர் தான் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணின் காதலன் தேவேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், வெளியான தகவல் விவரம் வருமாறு:–

வேறு ஆணுடன் பார்த்தார்
தேவேந்திரா, கொலபாவில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவரும், இளம்பெண் கின்ஜாலும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கின்ஜால் எல்லா ஆண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். இது தேவேந்திராவிற்கு பிடிக்கவில்லை. பிற ஆண்களிடம் பேசக்கூடாது என அவர் கின்ஜாலை பலமுறை கண்டித்தார்.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை தேவேந்திரா, கின்ஜாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வீட்டில் அவர் இல்லை. இந்தநிலையில் கின்ஜால் வேறு ஒரு ஆண் நண்பருடன் அந்த பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்ததை தேவேந்திரா பார்த்தார். இதனால் தேவேந்திராவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது.

குத்திக்கொலை
தான் பலமுறை கூறியும் வேறு ஆண்களுடன் நெருங்கி பழகும் காதலியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். இதையடுத்து அவர் சமபவத்தன்று கின்ஜாலிடம் நைசாக பேசி, தன் வீட்டருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து கின்ஜலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை அங்குள்ள புதருக்குள் வீசிவிட்டு சென்றார். அதன் பிறகு ஒன்றும் நடக்காதது போல வீட்டில் இருந்துகொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

Facebook Comments