மன்னார் திருக்கேதீச்சரம் மாந்தை மனித புதைகுழிக்கு அருகாமையில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணறு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் மன்றிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததோடு மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டப்ள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஸ அவர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

குறித்த மர்ம கிணறு தொடர்பான வழக்கு இன்று மன்றில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்னார் நீதவான் குறித்த மர்மக்கிணற்றை தோண்ட உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முதலில் குறித்த கிணறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் எவையும் காணப்படுகின்றதா என்பது குறித்து விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது எலும்புத்துண்டுகள் சில அகழ்வின் போது மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments