இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் திருப்பூரில் வைத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஜ்னு என்ற பெயரைக் கொண்ட இவருக்கும் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விசாரணைகள் பூர்த்தி அடைய முன்பதாகவே இவரை ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கியமானவர் என குறிப்பிட்டு அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் குஹுல்லா வனாய் என்ற பெயரைக் கொண்ட இலங்கையர் ஒருவரும் மஜ்னு என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும் குஹுல்லா வனாயும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளில் ஒருவர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், இந்த சந்தேக நபரின் இலங்கைத் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments