தாராபுரத்தில் காணாமல் போன மயானத்தில் இரவோடு இரவாக கல்லறை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

மயானத்தை காணவில்லை
தாராபுரம் கோழிப்பண்ணைமேடு பகுதியில் மயானம் இருந்தது. இந்த மயானத்தில் புதைக்கப்பட்ட முன்னோர்களின் கல்லறைகள் இருந்துள்ளன. ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்த தங்களது குடும்பத்தைச்சேர்ந்த முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சாமி கும்பிடுவதற்காக, கல்லறைகளுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மயானத்தையும், அதில் கட்டப்பட்டிருந்த கல்லறைகளையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தார்கள்.

இந்த நிலையில் மயானம் இருந்த இடத்தில் இரவோடு இரவாக புதிய கல்லறை கட்டப்பட்டது. கல்லறைக்கு உரியவர்களின் குடும்பங்கள் கல்லறையில் சடங்குகளை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:–

கொட்டாபுளிபாளையம் ரோட்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் மயானம் இருந்துள்ளது. இந்த மயானத்தில் அந்த பகுதியைச்சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இறந்தவர்களை புதைத்து வந்துள்ளனர். சிலர் இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்லறை கட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் மயானம் இருந்த பகுதிக்கு அருகே இருந்த தனியார் நிலத்தை அதன் உரிமையாளர்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்காக எந்திரங்களை கொண்டு நிலத்தை சமப்படுத்தியுள்ளனர். அப்போது அருகே மயானம் இருந்தால் வீட்டுமனைகள் விற்பனையாகாது என்று நினைத்து, மயானத்தையும், அதிலிருந்த கல்லறைகளையும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள்.

பிறகு அந்த இடத்தில் மண்ணைக்கொட்டி சமப்படுத்தியதால் மயானம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. இரு தரப்பினரிடையே நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் நிலத்தின் உரிமையாளர்கள் விடிவதற்குள் கல்லறை கட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவித்தார்கள். அதன்படி புகார் அளித்திருந்த கோமதி என்பவரின் தாத்தாவின் கல்லறை கட்டிக்கொடுக்கப்பட்டது. கோமதியின் குடும்பத்தினர் ஆடி அமாவாசை அன்று கல்லறையில் சாமி கும்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Facebook Comments