நடிகர் விக்ரமின் மகளிடம் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருட்டு போய்விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சாமி, அருள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்ரம். இவருடைய மகள் அக்ஷிதா (வயது 22). சமீபத்தில் தான் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அக்ஷிதா நேற்று மாலை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு நான் இன்று (நேற்று) ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது கையில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ நைசாக திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

திருட்டு போன வைர மோதிரத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆயிரம் விளக்கு போலீசார் அக்ஷிதா கொடுத்த புகார் மனு தொடர்பாக நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

குறிப்பிட்ட ஐஸ்கிரீம் கடையில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவு வரை மோதிரம் கிடைக்கவில்லை. மோதிரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Facebook Comments