இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிந்த பின்னர் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் 21ம் திகதி நடக்கிறது.
இந்த தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய வீரர்களை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதில் அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணியின் முன்னணி வீரராக திகழும் மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இவர் பல முறை குறைந்த பந்தில் அதிக ஓட்டங்கள் அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார். துணைக்கண்டத்தில் சிறப்பாக விளையாடும் மேக்ஸ்வெல்லை நீக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
முக்கியமான நேரத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவினாலும் கடந்த சில போட்டிகளில் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. அவர் கடந்த 10 இன்னிங்சில் 11.80 சராசரியே வைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவர் அதிகபட்சமாக 46 ஓட்டங்களே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜோன் ஹாலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேக்ஸ்வெல் அவுஸ்திரேலிய அணிக்கு சிறப்பாக பங்காற்றினாலும் அவர் தற்போது சரியான பார்மில் இல்லை. உள்ளூர் போட்டிகளில் அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவாளர் ரோட் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
Facebook Comments