வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்றுக்காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க மற்றும் அதன் ஆலோசகர் தென்னே ஞானானந்த தேரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற 1500க்கும்மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபோதிலும் இதுவரையில் அவர்களுக்கான எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லையெனவும் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தாங்கள் பட்டப்படிப்பினை பல்வேறு கஸ்டத்தின் மத்தியில் நிறைவு செய்து நான்கு வருடங்களை கடந்துள்ளபோதிலும் தமக்கான நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமை மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக இதில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ள நிலையிலும் அவற்றினை பட்டதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் தமது கோரிக்கை தொடர்பில் உரிய பதில் வழங்காவிட்டால் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கும் நிலையேற்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.

Facebook Comments