கிளிநொச்சி பளைப்பகுதியில் பதினைந்து வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் விடுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக நேற்று  (04-08-2016) மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக பளைப்பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று  (04-08-2016) நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த மூவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த விடுதியினை சீல் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பளைப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவு செய்யப்படாத விடுதிகள் இயங்கி வருவதாகவும் இந்த விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கிளிநொச்சி இரணைமடு சந்திப்பகுதியில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து பெண்களை அழைத்து வந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பாக விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Facebook Comments