சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட ஆய்வதிகாரி றிட்டா ஐஸாக், அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை அவரது விஜயம் அமையவுள்ளது என, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில், றிட்டா ஐஸாக்கினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பல்வேறு தவறுகள் காணப்பட்டதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. பேரவையில் சமர்ப்பிக்கப்படும் இவ்வாறான அறிக்கையில், தவறானதும் உண்மையற்றதும் பிழையாக வழிநடத்துவதுமான மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஏமாற்றமடைவதாக, இலங்கை அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரது விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள அரசாங்கம், ‘சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட தவறான மேற்கோள்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது, சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான ஐ.நா விசேட ஆய்வதிகாரியின் இலங்கை விஜயத்தை நாம் வரவேற்கின்றோம். விசேட ஆய்வதிகாரியின் இவ்வாறான விஜயம், இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் கலந்துரையாடி, உண்மையான தகவல்களைப் பெற வாய்ப்பாக அமையும்’ எனத் தெரிவித்துள்ளது.

Facebook Comments