மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்வதனால் விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடர்கிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக சோலை நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார்.

துப்புரவு தொழிலாளியான சோலை நாராயணன் அடுக்குமாடி கட்டடத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மேலக்கால் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சோலை நாராயணன் சுத்தம் கொண்டிருந்தார். அப்போது, அந்த கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக திடீரென விஷவாயு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனை சுவாசித்த நாராயணன் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கழிவுநீர் தொட்டியில் இருந்து சோலை நாராயணன் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு தாக்கி ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இதனை தடுக்க அரசு உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Facebook Comments