சட்டவிரோத மணல் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறிகள் கைப்பற்றப்பட்டன

சட்டத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிச்சென்ற ஐந்து லொறிகளை கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸார் இன்று (சனிக்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த லொறிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், முறையற்ற அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் குறித்த லொறிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றுச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டு வட்டக்கச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 2 லொறிகளும், வழி அனுமதிபத்திரத்திற்கு மாறாக வாகனம் செலுத்தியமைக்காக மற்றுமொரு ரிப்பர் வாகனமும், அனுமதி பத்திரத்தில் வழி சரியான முறையில் குறிப்பிடப்படாமை காரணமாக ஏனைய இரண்டு ரிப்பர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ரிப்பர் வாகனங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments