சிங்களவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் உரிய யாழ்ப்பாணத்தை யுத்தத்தின் பின்னர் மீண்டும் பெற்றுகொள்ளும் நோக்கிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

நேற்று மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைக் கூறினார்.

யாழ்பாணத்திற்கு செல்லும் சிங்கள மாணவர்கள் பௌத்தத்தையும் சிங்களத்தையும் மனதில் வைத்துக்கொண்டே தமது செயற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர்களின் முகநூல் பக்கங்களைப் பார்த்தாலே இது தெரிந்து விடும்.

மேலும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்க தேவையில்லை. தமிழ்மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வருகையின் காரணமாக அவர்கள் தமது கலாச்சாரத்தினை முடக்கும் நோக்கிலேயே வருவதாக எண்ணிக்கொள்கின்றனர்.

இவ்வாறான மனநிலைகொண்ட மாணவர்களை யாழ்பாணத்திற்கு அனுப்புவது என்பது இலகுவில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை இல்லை. சிங்கள மக்கள் ஜப்பானுக்கு சென்று வசிப்பது போன்றல்ல யாழ்ப்பாணத்திற்கு சென்று வசிப்பது.

சிங்கள மாணவர்கள் பிரச்சினைகளுக்குரிய பிரதேசத்திற்கு சென்று வசிப்பதில் முறையாக தீர்மானங்கள் கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்னைப்பொறுத்த வரையிலும் இது இலகுவில் தீர்க்கப்படக்கூடிய விடயமல்ல எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Facebook Comments