உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ‘ஒலிம்பிக்’கின் 31ஆவது அங்கம், இலங்கை நேரப்படி இன்று (சனிக்கிழமை) காலை பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா, ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் நடைபெற்றது.

தென் அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில், அவர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஸர் ஷோ, வண்ண மயமான வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தலைவர் கார்லோஸ் குஸ்மான் வரவேற்புரைக்கு பின்னர், உள்நாட்டு நேரப்படி சரியாக அதிகாலை 3.25 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதாக பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்தார்.

இதையடுத்து, குழந்தைகளின் குதூகலமான ஆடல், பாடலுடன் ஒலிம்பிக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. போதைப் பொருளை பயன்படுத்த மாட்டோம், ‘போங்கு ஆட்டம்’ ஆட மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

கொடி ஏற்றத்துக்கு பின்னர், பிரேசில் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரரான குஸ்ட்டாவோ குவெர்ட்டென் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி மரக்கானா திடலை சுற்றி வந்தார். இறுதியாக, பிரேசில் நாட்டின் பிரபல மரதன் ஓட்ட வீரரான வான்டர்லியி டெ லிமா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

பின்னர், கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா நிறைவடைந்தது. விழா அரங்கில் மொத்தம் 74 ஆயிரத்து 738 பேர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளித்தனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பை பார்த்து ரசித்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல இவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த 31 ஆவது ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தாய்நாட்டை கடந்து வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்பவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments