தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்குள் குடியேறும் நோக்குடன் சட்டவிரோதமாகப் படகுகளில் பயணிப்போரின் எண்ணிக்கை எந்த வகையிலும் குறைந்த பாடில்லை என்றே கூறவேண்டும்.

தொழில்தேடி மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்று அங்கு நிர்க்கதியாகித் தவிக்கும் பெண்கள் தொடர்பில் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும் அது எந்தளவு தூரம் சாதாரண அடிமட்ட மக்களைச் சென்றடைந்துள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளம் வயதுப் பெண்கள் தங்கள் குடும்ப வறுமையைப் போக்கவும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் பணிப்பெண்களாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.

இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோரில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் சிறுவயதில் திருமணமானவர்கள், கணவன்மாரை இழந்தவர்கள் மற்றும் பெற்றோரால் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர்கள் என வறுமையில் வாடும் இளம் பெண்களே இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்.

எப்படியாவது தொழில் வாய்ப்பைப் பெற்று தங்கள் வறுமையைத் துடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே இவர்கள் மத்தியில் காணப்படுவதனால் மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பொருட்டு போலியான தகவல்களைக்கூட இவர்கள் வழங்கத் தயங்குவதில்லை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் பெண் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளை உற்றார் உறவினர்கள் வீடுகளில் விட்டு விட்டு இவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.இந்நிலையில் தாயின் அரவணைப்போ பாதுகாப்போ இல்லாத சூழலில் குறிப்பாக, பெண்பிள்ளைகள், குழந்தைகள் முதலானோர் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக நேர்கின்றன.

அதேவேளை, பணிப் பெண்களாகச் செல்லும் இளம் தாய்மாரும் பெண்களும் தங்கள் வேலை செய்யுமிடங்களிலுள்ள எஜமானர்கள் மற்றும் இவர்களின் உறவினர்களால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாக நேர்கின்றது.மேலும், பலர் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர்.

இவ்வாறு பணிப்பெண்களாகச் சென்ற ஒரு சாரார் இலங்கையிலுள்ள அவர்களின் உறவினர்களுடன் எந்தவிதமான தொடர்பும் அற்ற நிலையில் அவர்களுக்கு உண்மையில் என்னவானது என்று கூட உறவினர்களால் தெரிந்துகொள்ள முடியாதவாறு உள்ளனர்.

மேலும் பணிப்பெண்களாகச் சென்ற பலருக்கு உரிய வேதனம் வழங்கப்படாமலும், அவர்களின் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தியும், ஆணி ஏற்றியும் சித்திரவதை செய்தும் அனுப்பிவைப்பதை சர்வ சாதாரணமாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இது தொடர்பில் வேலைவாய்ப்புப் பணியகமோ அன்றேல் குறித்த மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களோ காத்திரமான வகையில் எதனையும் மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுவதையே பரவலாக அவதானிக்க முடிகின்றது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுமானவரையில் இளம்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் குழந்தைகள் உள்ள பெண்கள் வேலைதேடி மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடுக்க அரசாங்கம் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் அதுவும் சாத்தியமானளவு வெற்றியளித்ததாகத் தெரியவில்லை.

நாட்டிலிருக்கும் பெரும்பாலான போலி முகவர் நிலையங்கள் ஏதேனும் ஓர் வகையில் இவற்றை மூடி மறைத்து, விஸா பெற்றுக் கொடுத்து அவர்களை அனுப்பி வைப்பதிலேயே மும்முரமாகவுள்ளன.

இது ஒருபுறமிருக்க, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தி அதன் மூலம் பணம் உழைக்கும் கூட்டம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தமது நாட்டுக்குள் குடியேறுவதைத் தடுக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதும் முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது.

இதேவேளை, கடத்தல்காரர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கான பணத்தை வழங்கி தமது உயிரை துச்சமென மதித்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு செல்வோரின் படகுகள் கைப்பற்றப்படுவதுடன் அவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.இதனிடையே மனித கடத்தல்காரர்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஆர்.ஜே.ஒபேசேகர கேட்டுள்ளார்.

மனித கடத்தல்காரர்கள் மூலம் இலங்கைப் பெண்கள் உட்பட தொழிலாளர்கள் பலதரப்பட்ட மோசடிகளை மேற்கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதானது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, மனிதக் கடத்தல்காரர்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்து எவரும் வெளிநாட்டுக்கு தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலில் ஈடுபடும் மோசடிப் பேர்வழிகள் இலங்கையில் மாத்திரமன்றி சென்னை உட்பட சர்வதேச ரீதியில் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இவர்கள் அப்பாவி மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தவிதமான கரிசனையும் அற்றவர்களாகப் பணத்துக்காக கப்பலில் ஏற்றிச் சென்று நடுக்கடலில் தவிக்க விட்டு விட்டு தலைமறைவாகி விடுகின்றனர்.

அண்மையில் 40 பேர் அடங்கிய ஒரு தொகுதியினர் தென்னிந்தியாவிலுள்ள இலங்கை அகதிமுகாம் ஒன்றிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த சமயம் இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் கரையொதுங்க நேரிட்டது.

இந்நிலையில் அவர்களின் படகையோ அதில் இருந்தவர்களையோ அங்கு இறங்க அனுமதிக்காத இந்தோனேஷிய கரையோரப் பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக அங்கிருந்தும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

குறித்த படகில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அகதிகள் என்பதற்கு அப்பால் தங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைப் போக்கும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும், தமது தாய்நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலோ அன்றேல் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான வருமானமோ, நிச்சயமானதோர் எதிர்காலமோ இன்மையே இவர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுக்கக் காரணம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

இலங்கையில் தொழில்வாய்ப்புக்குரிய உரிய சூழலை உருவாக்குவதன் மூலமும், பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதமான நெருக்கடியுமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமுமே இவ்வாறான துயரங்களுக்கு முடிவு காணக்கூடியதாக இருக்கும்.

இன்றேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற மோகத்தாலான அடிமை வாழ்க்கையும் துன்பகரமான உயிரிழப்புகளுமே மிஞ்சுவதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

Facebook Comments