கல்முனையில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் பிரதிநிதிகள் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் குறித்த அமைப்பின் பொருளாளர் மௌலவி இசட்.ஏ.நதீர் தலைமையில் அதன் செயலாளர் யூ.எம்.நிஸார், கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் பற்றி ஆணையாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும், அனைத்து வீதிகளிலும் குப்பைக் கழிவுகள் வாரம் ஒரு முறை அகற்றப்படுவதுடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சுற்று வட்டாரத்தில் குவிக்கப்படும் குப்பைகள் வாரத்தில் இரண்டு நாட்களாவது அகற்றப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் குத்தகை அடிப்படையில் தனியார் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி நகர மண்டபத்தை புனரமைப்பு செய்து பொது மக்கள் பாவனைக்காக இயங்கச் செய்ய வேண்டும்.

மாநகர சபையினால் பராமரிக்கப்படும் வீதிகள் புனரமைக்கப்படவேண்டும். நகர மண்டப வீதி, அலியார் வீதி, கடற்கரை வீதி போன்றவற்றிலுள்ள பள்ளம், படுகுழிகள் போன்றவை சீர்செய்யப்பட வேண்டும்.

கல்முனை பொது நூலகத்திற்கு புதிய நூல்கள் மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு மாலை ஒன்பது மணி வரை திறந்திருக்கப்படுவதுடன், அதற்கு புதிய நுழைவாயில் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.

நகர நெடுஞ்சாலையின் நடுவே பூ மரங்கள் நடப்பட்டு அழகுபடுத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றுடன் மற்றும் பல பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏனையவை காலக்கிரமத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணையாளர் லியாகத் அலி உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Facebook Comments