கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வைத்தியசாலையின் பின்புறமாகவுள்ள ஆனந்தபுரம், இரத்தினபுரம் கிராமங்களை ஊடறுத்து கிளிநொச்சி நகரக் குளத்தில் கலப்பதாகவும், அதனால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகி சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அதற்கமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன், கரைச்சிப் பிரதேச சபைச் செயலாளர் க.கம்சநாதன் ஆகியோர் குறித்த இடத்திற்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மா.ஜெயராஜ் உடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் வெளியேறும் கழிவு நீரினை தற்காலிகமாக கொள்கலன்கள் மூலம் வெளியேற்றுவதென்றும் இதற்கு நிரந்தரத்தீர்வாக நிலக்கீழ் நீர்ச் சுத்திகரிப்பு மீள்சுழற்சி முறைகளைக் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments