தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கெட்டவர் என கூறிக்கொண்டிருக்கும் பலர் அவரிடம் சென்று நன்மை பெற்றவர்களே. நான் சிறீசபாரத்தினம், சிவகுமாரன் ஆகியோருடன் படித்தவள். அந்த காலத்தில் தரப்படுத்தல் என்ற மோசமான ஒன்று வந்தமையினாலேயே இந்த போராட்டம் தொடங்கியது என நல்லிணக்க செயன்முறைகளுக்கான செயலணியிடம் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஆவண காப்பாளர் ஒருவர் கருத்து கூறியிருக்கின்றார்.

மேற்படி செயலணியின் மக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்றய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,”தரப்படுத்தல்” என்ற விடயம் ஒரு இரவில் வந்தமையினாலேயே இளைஞர்கள் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். குறிப்பாக கணித பாடத்தில் சித்தி பெற்ற நான் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்க எங்கிருந்தோ எல்லாம் க.பொ. த சாதாரண தரம் சித்தியடையாதவர்கள் எல்லாம் பல்கலைக்கழகம் வந்தார்கள்.

அது ஒரு இரவில் வந்த நிலையில் இளைஞர்கள் ஆத்திரமடைந்தார்கள். ஆயுதங்களை தாங்கினார்கள். நான் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்குள் செல்லவில்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செய்த படுகொலைகள்,1990ம் ஆண்டு காலப்பகுதியில் வீரச்சோலை, வீரமுனை, வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட அம்பாறை தொடக்கம் வாழைச்சேனை வரையிலான பல பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு மாட்டிறைச்சி கடை அமைக்கப்பட்டது. இதற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்தது?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுத்ததா? 2006ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியது. மக்கள் தங்கள் கால்நடைகளை விற்றே வாழ்க்கை நடத்தினார்கள். அந்த இழப்புக்களுக்கு அரசாங்கம் என்ன செய்தது?

தமிழருக்கு நடந்தால் அவற்றுக்கு இழப்பீடு என்பதே கிடையாது. மேலும் அலிசாஹிர் மௌலானா கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு காரணமானவர். இதேபோல் றிஷாட் பதியூதீன் எப்போது நலன்புரி முகாம்களுக்கு சென்றாரோ அதன் பின்னர் பலர் காணாமல்போனார்கள்.

இந்த நாடு அழியும் ஒரு நாடு. இந்த நாட்டை நான் ஆசீர்வதிக்கப்போவதில்லை. கல்வி அறிவும், ஒழுக்கமும் இல்லாதவர்களே படையினர். லங்காசிறி ஊடகத்தில் பார்த்தேன். ஆளுநர் சில விடயங்கள் கூறியிருக்கின்றார்.

குறிப்பாக கலப்பு திருமணங்களை பற்றி பேசியிருக்கின்றார். அவர் என்ன நோக்கத்துடன் பேசினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இராணுவத்தில் உள்ளவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களும் ஒழுக்கம் இல்லாதவர்களுமே.

அவர்கள் எங்கள் பெண்களுக்கு காதல் கடதாசி கொடுக்கிறார்கள் காதலிக்க வற்புறுத்துகிறார்கள் என்பதனாலேயே நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய சமூக ஒழுக்கத்தின் படி பிள்ளைகள் தங்கள் பெற்றாருக்கு கடமை செய்யவே நாங்கள் பிள்ளைகளை பெற்ற வளர்கிறோமே தவிர பௌத்த மதத்திற்கு கடமை செய்ய நாங்கள் பிள்ளைகளை பெற்று வளர்க்கவில்லை.

ஆளுநர் சொல்கிறார் தமிழ் கடவுள்களை விகாரைக்குள் வைத்திருப்பதாக. இந்து கடவுள்கள் தமிழ் கடவுள்கள் அல்ல. என்பதுடன் புத்தர் ஒரு இந்து அவர் இந்துவாக பிறந்தார். இந்துவாகவே இறந்தார்.

அவருடைய போதனைகளை கேட்டவர்கள் அவருடைய இறப்பிற்கு பின்னர் அங்கிருந்தால் பிரச்சினை என்பதால் தென் இந்தியாவுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் துரத்தப்பட்டு பௌத்த மதம் உருவானது. என்பதை ஆளுநர் முதலில் அறிந்து கொள்வது நல்லது.

நல்லாட்சியில் நம்பிக்கையில்லை. வெளிநாட்டு உதவி தேவை

இலங்கை நாடு ஒரு ஜனநாயக நாடோ, இறமை உள்ள நாடோ இல்லை. ஜனநாயக நாடு என்றால் இன விகிதாசர அடிப்படையில் பொலிஸ், படையினர், நீதித்துறை ஆகியன இருக்கவேண்டும். ஆனால் இங்கே அது கிடையாது.

மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது வேறு நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இந்த நாடு இறமை உள்ள நாடும் இல்லை. 1983 இனக்கலவரத்தினால் என்னுடைய சகோதரன் புத்திசுவாதீனத்தை இழந்தார்.

அடுத்தடுத்து வந்த காலங்களில் மருத்து தட்டுப்பாடு காரணமாக என்னுடைய இரு சகோதரிகள் மற்றும் தாயை இழந்தேன். இதற்கு நீதி வேண்டும் என கேட்டு இப்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். அவர் எனக்கு பதில் எழுதியிருக்கின்றார். வீடு தருவதாக எந்த பிறவியில் அவர் எமக்கு வீடு கட்டி கொடுக்கப்போகிறார்?

துப்பாக்கி முனையில் நல்லிணக்கம் பிறக்குமா?

1983ம் ஆண்டு இனக் கலவரம் நடந்தபோது அங்கே 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஒரு பௌத்த பிக்கு சொன்னாரா? இது எங்கள் சமயத்திற்கு இழுக்கான விடயம். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என சொல்லவில்லையே.

இப்போது பௌத்த மத தலமை பிக்குவுக்கு பாதுகாப்பு அமைச்சர் சொல்லியிருக்கிறாராம் இராணுவம் தண்டிக்கப்படாது. என ஆகவே நான் கேட்கிறேன். துப்பாக்கி முனையில் நல்லிணக்கம் பிறக்குமா?

சலாவ வெடிப்பு சம்பவத்திற்கு வாடகை 50 ஆயிரம். வலிவடக்கு மக்களுக்கு என்ன?

சலாவ இராணுவ முகாமில் ஆயத கிடங்கு வெடித்த சம்பவத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு ஜனாதிபதி 50 ஆயிரம் ரூபா வாடகை கொடுக்கிறார். அதே ஜனாதிபதி வலி,வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் வந்தார். அந்த மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாரா? என்றால் இல்லை. எனவே இனத்துவேசம் கொண்ட ஒரு ஜனாதிபதியே இருக்கிறார்.

குமாரபுரம் படுகொலைக்கு கிடைத்த நீதி சரியானதா?

திருகோணமலை- குமாரபுரம் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு அதாவது திருகோணமலை நியாயாதிக்க எல்லைக்குள் நடந்த ஒரு சம்பவத்திற்கு அனுராதபுரத்தில் வழக்கு நடத்தியமை சரியானதா?

மேலும் இந்த வழக்கில் ட்றயலட் பார் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு உருவாக்கப்படாமல் 6 சிங்கள கொலைகாரர்கள் தப்பியிருக்கின்றார்கள்.

இதேபோல் பிந்துனுவௌ பகுதியில் புனர்வாழ்வுக்கு என அழைத்து செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது?

எனவே பேரினவாத சிந்தனையில் உள்ள நீதித் துறையினால் எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனவே வெளிநாட்டு நீதிபதிகளே எமக்கு தேவை.

வயோதிபர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும்!

எங்களுடைய நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளிலும் இளைஞர்கள் அரசியலில் அங்கத்துவம் பெறுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இதனால் வயோதிகர்கள் என்றால் அரசியல்வாதிகள் என்றும். இளைஞர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்றும் இலகுவாக கணிக்கப்படுகின்றது.

மேலும் பாராளுமன்றத்தில் 5 பெண்களும் 3 இளைஞர்களுமே இருக்கின்றனர். எனவே பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியலில் அதிக பிரதிநிதி த்துவம் வழங்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். மேலும் முதியவர்களிடமிருந்து அரசியல் பிடுங்கப்படவேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

Facebook Comments