நீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பொருட்டு அவர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையைவலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஈடுபட்டிருந்த நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது,

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தும் முகமாக நீதி அமைச்சருடனான கலந்துரையாடலின் பிரகாரம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.பல கைதிகளின் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலைமைகளே காணப்பட்டிருந்தன.

தற்போது அந்த நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் சட்டமா அதிபருடன் நான் இவ்விடயங்கள் தொடர்பாக நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தேன்.

கடந்த காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் காலதாமதங்கள் காணப்பட்டிருக்கின்றமையை அவரிடத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதன்போது சட்டமா அதிபர், 90 பேருக்கு அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.அத்தோடு 50 பேர் வரையிலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே கடந்த காலத்தில் இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் சில தாமங்கள் காணப்படுகின்றன.அவற்றையும் போக்கி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும்.

சில சக்திகள் இந்த பிரச்சினையை பூதாகாரமாக்கி அரசியல் சுயலாபம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அவ்வாறானவர்களின் இலக்குகளுக்குள் தமிழ் அரசியல் கைதிகள் சிக்கக்கூடாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றார்.

Facebook Comments