அமைச்சரவையின் அனுமதியின்றி வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச சட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளாது எவ்வாறு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது தொடர்பில், விரிவான விசாரணை நடத்தப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முந்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய நடைமுறைகளை பின்பற்றி மீளவும் வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பு குறித்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் ஜனாதிபதியை இரண்டு தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனவே, அனைத்து யோசனைகளையும் மீளவும் பரிசீலனை செய்து நாடாளுமன்றில் புதிய சட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments