காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் குறித்த உத்தேச சட்டத்தை உச்ச நீதிமன்றில் சமர்பித்து, சட்ட விளக்கம் கோரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுலகம் இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் காணப்படுகின்றதா? என்பது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் அமைப்பின் 129/1ஆம் சரத்தின் அடிப்படையில் சட்டம் அல்லது சம்பவம் ஒன்றின் சட்டபூர்வ தன்மை குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட

விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, காணாமல் போனவர்கள் அலுவலகம் குறித்து பொதுமக்கள் உச்ச நீதிமன்றில் விளக்கம் கோராத போதிலும், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விளக்கத்தை கோர முடியும்.

இவ்வாறு சட்ட விளக்கம் கோருவதன் மூலம் நாடாளுமன்றிற்கு குறித்த சட்டம் சமர்ப்பிக்கப்படுவதனை ஜனாதிபதியினால் தடுக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மையில் இந்த நாட்டை நேசித்தால், தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் அமைப்பது குறித்த உத்தேச சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதனை தடுத்து, உச்ச நீதிமன்றின் விளக்கத்தை கோர முடியும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments