போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது.

பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு மீள்குடியேற்ற செயலணி என அது நீண்டு கொண்டே செல்கிறது.

ஆட்சி மாற்றத்தின் பின் அமைதியான சூழல், அச்சமின்றி வாழக்கூடிய நிலமை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி என்பது மந்தமாகவே உள்ளது. அதிலும் வடக்கின் நிலை இன்னும் மோசம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் மத்திய மற்றும் மகாண அரசுகளின் கயிறு இழுத்தல் போட்டிக்குள் சிக்கியுள்ளது வடக்கின் பொருளாதார மத்திய நிலைய விவகாரம். இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும், தமிழ் மக்களுக்குள்ளும் குத்துவெட்டுக்களையும் உருவாக்கியுள்ளது.

2010ம் ஆண்டு வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண முன்னாள் ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிபர், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என 82 பேரின் பங்கு பற்றுதலுடன் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஓமந்தைப் பகுதியில் ஏக்கர் காணியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு செய்யப்படாததால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கான ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைக்க 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இன்று 7 மாதங்கள் கடந்த நிலையில் கூட அதனை எங்கு அமைப்பது என்ற இழுபறி முடிந்தபாடில்லை. மக்கள் நலன்களையும், அவர்களது விருப்பங்களையும் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் திட்டங்கள் வெற்றியளித்தாக வரலாறு இல்லை.

கடந்த அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பாந்தோட்டை விமான நிலையம் தொடக்கம் சில உள்ளூர் வீதிகள் வரை பல சான்றுகள் கண்முண்னே உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தக் கூடியதும், தென்னிலங்கை மற்றும் வடபகுதி உற்பத்தியாளர்களை இணைக்கக் கூடிய ஒரு உறவுப்பாலமாகவும், பொருளாதார மேம்பாட்டிற்கான தளமாகவும் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பயன்படுத்த வேண்டும். அதுவே பயன்னுள்ளது.

அவ்வாறான நிலையில் அதனை பொருத்தமான இடத்தில் அமைப்பது கட்டாயமானதும் கூட. வடக்கு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வடக்கு மக்களின் ஆதரவுடன் இயங்குகின்ற வடமாகாண சபை தொடர்பிலும் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளின் விருப்பம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் அவர்களே வடக்கு மக்களின் குரல்கள். ஆனால் அதை விடுத்து தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழான திணிப்பாகவே கருத வாய்ப்புள்ளது. அவ்வாறான ஒரு நிலையையே வடக்கு பொருளாதார மத்திய நிலைய விவகாரமும் உருவாக்கியுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை நகரில் இருந்து 2- 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் ஆரம்பத்தில் கூறியிருந்தார். அதனடிப்படையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்குரிய காணியை விடுவிக்குமாறும் மாகாணசபையிடம் கோரப்பட்டிருந்தது.

ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் விவசாய பண்ணைக் காணியை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததுடன், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் எனவும் கோரினர்.

advertisement

விவசாய மக்களின் விருப்பம் கூட அதுவே. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க கூடாது என்பதில் இன்று வரை தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் கூட இந்த விடயத்தை சரியாக கையாளவில்லை. அவர்கள் கூட இரண்டுபட்டு நிற்பதையே அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கின்ற போதும் அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவு சார் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

இந்நநிலையில் மத்திய அரசாங்கத்துடன் வடக்கு முதல்வர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் பேசி பொருத்தமான இடத்தினை தெரிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை சரியான முறையில் செய்ய தவறியதன் விளைவே இன்று தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பொருளாதார மத்திய நிலைய நிதியை இரண்டாக பிரித்து இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாங்குளத்தில் கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையமும், வவுனியா- மதகுவைத்த குளத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான பொருளாதார மத்திய நிலையமும் அமைக்க உத்தேசித்துள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்படும் 200 மில்லியன் ரூபாய் என்பது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெறுமதியானது. அதனை வீணாக செலவு செய்ய அனுமதிக்க கூடாது. பொருத்தமான திட்டத்திற்காக சரியாக பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறான நிலையில் இரண்டு பொருளாதார மத்தியநிலையம் என்பது சாத்தியமானதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

முதலாவதாக கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்தில் அமைப்பது என்பது எந்தவகையில் என்பது புரியவில்லை. வடக்கைப் பொறுத்தவரை தற்போதும் கடல் உணவுகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. கடற்கரைகளுக்கே செல்லும் கூலர் வாகனங்களும், சம்மாட்டிகளும் கடல் உணவுகளை கொள்வனவு செய்து அதனை தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதனால் வடக்கின் உள்ளூர் சந்தைகளுக்கு வருகின்ற மீன்கள் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை மாங்குளத்தில் அமைப்பதால் அங்கு கடல் உணவுப் பொருட்கள் செல்லுமா…?, கடற்கரையில் இருந்து சாதாரண மீனவர்கள் எவ்வாறு மீன்களை கொண்டு செல்வது..? என்ற கேள்வி எழுகின்றது.

அதையும் மீறி கடல் உணவுகள் பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்தால் கூட அவை காலையிலேயே வரும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வர்த்தகம் முடிவடைந்து விடும். அதன்பின் அம் மையம் மூடியே இருக்கப்போகின்றது. அதற்கு தற்போதைய நிலையில் நூறு கோடியை ஒதுக்குவது பொருத்தமானதா..?

இந்தநிலையில், மாங்குளத்தில் கடல்உணவுக்கான பொருளாதார மத்திய நிலையம் என்பது வடக்கு நோக்கி ஒரு மையத்தை அமைத்ததாக காட்டுவதற்கான ஒரு பொறிமுறையாக மட்டுமே இருக்கப் போகின்றது. ஆனால் எந்த நன்மைகளையும் பெற்றுவிட முடியாது.

இரண்டாவதாக விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மதவு வைத்தகுளத்தில் அமைக்க அரசாங்கம் இணங்கியுள்ளது. தாண்டிக்குளத்தை வடக்கு முதலமைச்சர் தரப்பு எதிர்க்க, ஓமந்தையை மத்திய அமைச்சர்களான றிசாட், ஹரிசன், வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்க்க தற்போது வவுனியா மதவுவைத்தகுளம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் இருந்து 2-3 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த காணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் காணியை வடக்கு முதல்வர் கூறிய போது அதனை குத்தகைக்கு கொடுத்ததால் பெற முடியாது என மத்திய அமைச்சர் ஒருவரால் கூறப்பட்டும் இருந்தது. தற்போது அவரே அந்த காணியை விடுவித்து தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆக இங்கு தாம் நினைப்பதையே செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசாங்கம் இருப்பதையே இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

மதவு வைத்த குளத்தில் அமைப்பது என்பது கூட நீண்டகால விஸ்தரிப்புக்கும், வாகன தரிப்பிட மற்றும் திண்ம திரவ கழிவுகளை வெளியேற்றுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாகவே சனச்செறிவு மிக்க பகுதியாகவுள்ளது.

விவசாய பெருட்களைப் பொறுத்தவரை வடக்கு மக்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் அது அமைக்கப்படுமாக இருந்தால் மாங்குளமும், வவுனியாவை மையப்படுத்தியதாக அமைப்பதாக இருந்தால் ஓமந்தையுமே பொருத்தமானது.

ஆனால் அதை விடுத்து பெரும்பான்மையான வடக்கு மக்களின் விருப்பதற்கு மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது வேடிக்கையானதே.

வடமாகாணசபை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, பிரதமர் தலையிலான அமைச்சரவை, ஜனாதிபதி என பலரும் இந்த விடயத்தில் தலையிட்டும் கூட ஒரு நிலையான முடிவுக்கு வந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியாதநிலையே இன்று வரை இருக்கிறது.

இந்நிலையில், சாதாரண ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கே இவ்வளவு முரண்பாடு, குழப்பங்கள் என்கின்ற போது எவ்வாறு இந்தநாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துவது என்ற கேள்வி தவிர்க்க முடியாததே.

Facebook Comments