சூரியவெவ, மீகஹபுர கிராமத்தினுள் புகுந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (11) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மீகஹபுர கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஏ. சந்திரான எனும் 42 வயதான, ஒரு பிள்ளையின் தாய் மரணித்துள்ளார்.

தனது வீட்டின் முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்துள்ளதோடு, அவரது கணவர் பிள்ளையை வகுப்புக்குச் செல்வதற்கு தயார்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த வேளையில், குறித்த காட்டு யானை அவரை துரத்தியுள்ளது.

இதன்போது, கணவன், மனைவி ஆகிய இருவரும், தப்பி ஓடியுள்ளதோடு, கணவர் அயல் வீட்டினுள் நுழைந்து தப்பியதை அடுத்து, தப்பியோடிய குறித்த பெண்ணை யானை தாக்கியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த பெண், குறித்த இடத்திலேயே மரணித்துள்ளார். இதனை அடுத்து, குறித்த யானை அப்பிரதேசத்தை விட்டு சென்றுள்ளது.

இதனை அடுத்து, அப்பிரதேசத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை, பிரதேசவாசிகள் திட்டியதோடு, காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காது, ஒருவர் உயிரிழந்ததும் வந்து செல்கின்றீர்கள் என கோபத்துடன் தெரிவித்தனர்.

Facebook Comments