தமிழ் பெண்களின் கல்வி வளர்ச்சியில் உடுவில் மகளிர் கல்லூரியின் தோற்றம் வரலாற்றில் என்றுமே மறுக்க முடியாதது. இன்று தமிழ் பெண்கள் அனுபவிக்கின்ற கல்விச் சுதந்திரத்தை ஆரம்பித்து வைத்தது உடுவில் பெண்கள் கல்லூரி என்றால் மிகையல்ல.

அவ்வாறு பெயர்பெற்ற கல்லூரி கடந்த சில நாட்களாக தவறான காரணங்களுக்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் அதிபராக இருந்து வரும் சிராணி மில்ஸ் அவர்கள் அவருடைய 60வது வயதை செப்ரம்பர் 7, 2016இல் எட்டுவதால் அவரை ஓய்வூதியம் எடுக்கச் சொல்லி உடுவில் பெண்கள் கல்லூரியின் நிர்வாக்த்தை தக்க வைத்துள்ள யாழ். ஆயர் டானியல் தியாகராஜாவின் கீழியங்கும் தென்னிந்தியத் திருச்சபை அறிவித்து இருந்தது. இந்த அறிவித்தலை சிராணி மில்ஸ் நிராகரித்தார். இதுவே உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலகத்தின் மையமாக உள்ளது.

உடுவில் மகளிர் கல்லூரி மெதடிஸ்ற் – அமெரிக்க திருச்சபையின் கீழ்ப் பணிபுரியும் அமெரிக்க மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. பிற்காலங்களில் திருச்சபைகளிடையே ஏற்பட்ட உடன்படிக்கைகளின்படி தற்போது தென்னிந்திய திருச்சபையினூடாக நிர்வகிக்கப்படுகிறது. தற்போது எழுந்துள்ள இப்பிரச்சினை இது முதற்தடவையானதும் அல்ல. இப்பிரச்சினைக்கு ஒரு பின்னணியும் வரலாறும் உண்டு.

ucctruths  என்ற இயைத்தளத்தில் 2007 யூலை 17இல்    UCC’s Wider Church Ministries involved in overseas dispute  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது. அதில்  Wider Churches Ministries of the United Church of Christ (WCM-UCC)  தென்னிந்திய திருச்சபையின் இரு பிரிவினரிடையே நிகழும் உட்சண்டையை மதிப்பீடு செய்வதாகக் குறிப்பிட்டு உள்ளது. அத்தோடு இப்பிரச்சினையில் தென்னிந்திய திருச்சபையின் யாழ். மறை மாவட்டத்தில் யார் அதிகாரத்தை வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

2007 யூனில் புதிய ஆயர் டானியல் தியாகராஜாவின் கீழ் தென்னிந்திய திருச்சபைக்கான புதிய செயற்குழுவும் அதன் உத்தியோகத்தர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அமெரிக்கன் சிலோன் மிஷன் உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால்  Executive Minister of the Wider Church Ministries of the United Church of Christ    றொஜர் விற்றே 2007 யூலை 3இல் ஆயர் டானியல் தியாகராஜாவுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் அமெரிக்க சிலோன் மிஷனின் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது என்று பணித்துள்ளார். அத்தோடு WCM  அமெரிக்கன் சிலோ மிஷன் உடன் இணங்கிச் செயற்படக்கூடிய கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை அசையாச் சொத்துக்கள் எதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் அமெரிக்க சிலோன் மிஷனின் கட்டமைப்பில் தலையிடுவதற்கு WCM  க்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும் அமெரிக்க சிலோன் மிஷன் தென்னிந்திய திருச்சபையின் கீழேயே வருவதாகவும் தென்னிந்திய திருச்சபையின் பேச்சாளர் விக்ரர் கருணைராஜன் குறிப்பிட்டு உள்ளார். அவர் 2008 மே 5இல் சிறிலங்கா கார்டியனில் றொஜர் விற்றே, அருட்தந்தை ஜெயநேசன் ஆகியோர் சிராணி மில்ஸ் தனது அதிபர் பதவியைத் தொடர்வதற்கு உறுதி அளித்து இருப்பதாகவும் அவரை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

Daniel_Thiyagarajahதென்னிந்திய திருச்சபை புதிய ஆயர் டானியல் தியாகராஜாவின் தலைமையின் கீழ் இயங்க அமெரிக்க சிலோன் மிஷன் உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணக் கல்லுரி ஆகியவற்றின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய அமெரிக்கன் சிலோன் மிஷன் பழைய நிர்வாகத்தின் தலைமையில் விடப்பட்டது.

2009இல் இதே பிரச்சினை இதே வடிவத்தில் தலைதூக்கிய போது அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா வழங்கிய அழுத்தம் காரணமாக தென்னிந்திய திருச்சபை அதிபர் சிராணி மில்ஸ் யை தொடர்ந்தும் அதிபராக இருக்க அனுமதித்தது. 2009இல் தனது பதவியை ஒரு தடவை தக்க வைத்துக்கொண்ட சிராணி மில்ஸ் அடுத்து வந்த ஆண்டுகளில் தனக்குரிய மாணவிகள் படையணி ஒன்றையே உருவாக்கி விட்டார். இந்தப் படையணியே 2016இல் தென்னிந்திய திருச்சபையை விரல் விட்டு ஆட்டியது.

உடுவில் பெண்கள் கல்லூரி 2012இல் வெளியிட்ட முகநூல் பக்கத்தில் யூன் 3, 2016இல் உடுவிலைற் வின் என்ற முகநூல் பெயரில் அதிபர் சிராணி மில்ஸின் படத்துடன் பதிவு செய்யப்பட்ட கருத்து இப்பிரச்சினையின் மையத்தை எடுத்துக்காட்டுகிறது. இப்பதிவு சிராணி மில்ஸ் இன் பதிவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இம்முகநூல் சிராணி மில்ஸ் அவர்களை ஆராதித்தே உள்ளது. அதில் மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டிவிடும் வகையில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்:

“எமது கல்லூரிக்குப் புதிய அதிபர் ஒருவரினை நியமிக்கும் பணியினை நிருவாகக் குழு ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள் பெற்றோர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய காலம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. பாடசாலையினை வழிநடாத்தக் கூடிய தகைமை அற்றவர்கள்,  திருச்சபை அரசியலின் நிமித்தம் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்படலாம்.

1. திருமதி ஷிராணி மில்ஸ் போன்ற ஆளுமையான, திறமை மிக்கஇ நேர்மை மிக்க,  கண்ணியமான, பல்துறை ஆற்றல் மிக்க‌ ஆசிரியர்கள் எமது கல்லூரியில் தற்போது யாராவது இருக்கிறார்களா? அவருடைய வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் யாராவது பாடசாலையினுள் இருக்கிறார்களா?

2. அவ்வாறு யாரும் இல்லாவிட்டால்இ நாம் வெளியில் இருந்து யாரையாவது அதிபராக நியமிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமா? பழைய மாணவிகளாகிய நாம் திறமைமிக்க வெளி நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பதவிக்கு விண்ணப்பிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

3. அதிபர் தெரிவுச் செயன்முறையில் பழைய மாணவிகளின் சங்கம் என்ன வகையான பங்கினை ஆற்றப் போகிறது? நாம் வெறுமனே பார்வையாளர்களாக மாத்திரம் இருக்கலாமா? அல்லது எமது பிரதிநிதிகளும் தெரிவுக் குழுவில் இடம்பெற வேண்டுமா?

4. …… ஷிராணி மில்ஸ் ஏன் தொடர்ந்து சில வருடங்களுக்கு அதிபராகப் பணியாற்றுவதற்கு அனுமதிப்படலாம் அல்லவா?  இது தொடர்பில் பழைய மாணவிகள் உரையாட வேண்டும். தேவையேற்பட்டால் அணிதிரளவும் வேண்டும். நிருவாகக் குழுவின் அதிபர் நியமனம் தொடர்பான முடிவுகள் பிழையான திசையில் செல்கின்றனஇ அல்லது பாடசாலையின் நீண்டகால நலனுக்கு எதிராக இருக்கப் போகின்றன என்றால்,  பாடசாலை மாணவிகளும், ஆசிரியைகளும், பெற்றோரும் 2009இல் செய்தது போன்று நாம் வீதிக்கு இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும்.”

Uduvil_Protest_01இவ்வாறான ஒரு கருத்து பதிவு செய்யப்பட்ட நிலையில் தனது 60வது வயதை நெருங்கிய சிராணி மில்ஸ் தன்னை ஓய்வூதியத்திற்கு நிர்ப்பந்திக்காமல் முன்னைய அதிபர்கள் போல் 70பதுக்களிலும் சேவையை நீடிக்க அனுமதிக்குமாறு கோரினார். தென்னிந்திய திருச்சபை, அதன் வழி செல்லாத தனக்கு சேவையை நீடிக்காது என்று தெரிந்தும் அவர்களுக்கு தனது விருப்பத்தை 2016 யூனில் கடிதமாக அனுப்பி வைத்தார். தென்னிந்திய திருச்சபை அக்கடிதத்தை புறக்கணித்துவிட்டு இருந்தனர். முதலாவது கடிதம் எழுதப்பட்டு மூன்று வாரங்களில் மற்றுமொரு கடிதம் எழுதப்பட்டது.

அதனை அடுத்து ஓகஸ்ட் 15இல் அது தொடர்பாக கதைப்பதற்கு சிராணி மில்ஸ் யை தென்னிந்திய திருச்சபை அழைத்திருந்தது. அச்சந்திப்பில் ஆயர் டானியல் தியாகராஜாவும் அவரது மனைவி தயாளினி தியாகராஜாவும் சிராணி மில்ஸ் உடன் உரையாடினர். மறுநாளே சேவைக்காலத்தை நீடிக்கும் சிராணி மில்ஸின் விண்ணப்பம் எதிர்பார்க்கப்பட்டது போல் நிராகரிக்கப்பட்டதுடன், அவர் அறுபதாவது வயதை எட்டும் தினத்துக்கு முதல் நாள் செப்ரம்பர் 6இல் தனது பொறுப்புக்களை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இவ்விடயத்தில் இலங்கை, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உடுவில் பெண்கள் கல்லூரியின் உலகப் பழைய மாணவியர் அமைப்பு அதிபர் சிராணி மில்ஸ் இன் பின்னால் அணிவகுத்து நின்றனர். 60வது வயதை அடைந்தவரை ஓய்வூதியத்திற்கு நிர்ப்பந்திப்பதாக பழைய மாணவியர் அமைப்பு குற்றம்சாட்டியது. தென்னிந்தியத் திருச்சபை எதேச்சாதிகாரத்துடன் செயற்படுவதாகவும் அவர்களுடைய அறிக்கை குற்றம்சாட்டி இருந்தது.

உடுவில் பெண்கள் கல்லூரி அதிபருக்கான வெற்றிடத்தை தென்னிந்திய திருச்சபை தனது இணையத்தில் வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் ஓகஸ்ட் 30இல் துணை அதிபராக இருந்த சுனிதா ஜெபரட்ணம் அதிபராக நியமிக்கப்படுவதாக தென்னிந்திய திருச்சபையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். உடுவில் பெண்கள் கல்லூரியின் உலகப் பழைய மாணவர்கள் அமைப்பும் சிராணி மில்ஸ் க்கு அனுசரணையாகச் செயற்பட்டனர். இவ்வமைப்பு பாடசாலையின் வளர்ச்சிக்கான நிதியை வழங்கி இருந்ததால் இதன் பலத்துடனும் தனக்கு சார்பான மாணவிகள் அணியின் பலத்துடனும் சிராணி மில்ஸ் ஒரு வாரமாக தனது பதவியைத் தக்க வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தமையால், செப்ரம்பர் 08 அன்று பாடசாலைக்குச் சென்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன்இ ஆளுநர் சபையைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அதிபர் சிராணி மில்ஸ் புதிய அதிபர் சுனிதா ஜெபரட்ணம் மற்றும் மாணவிகளுடன் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக சுனீதா ஜெபரட்ணம் கடமையை பொறுப்பேற்றுள்ளார். ஓகஸ்ட் 13 முதல் முதல் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்திற்கும் சிராணி மில்ஸ் இன் பாடசாலைத் தலைமைத்துவத்திற்கும் இடையே வழக்குகளும் நடைபெற்றது. இந்தப் பனிப்போரில் பாடசாலை மாணவிகளின் கல்வி மிக வீழ்ச்சி கண்டது, கல்லூரி ஆசிரியர்கள் சலிப்படைந்தனர், பாடசாலை மாணவக் கட்டுப்பாடுகள் சீர்குலைந்தது, பாடசாலை தனது நன்மதிப்பை இழந்தது என்று தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற அப்பாடசாலையின் பழைய மாணவி. தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அப்பழையமாணவி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு செயற்படவில்லை என்றும் தெரிவித்தார். இம்மாணவியின் குற்றச்சாட்டுகள் பாடசாலையின் கல்விப் பெறுபேறுகளின் மூலமாகவும் வெளிப்பட்டு நிற்கின்றது. தேசியப் பாடசாலைகளைக் கட்டிலும் குறைவான பெறுபேறுகளையே சிராணி மில்ஸ் இன் தலைமைத்துவத்தின் கீழ் பாடசாலை பெற்றுக்கொண்டது.

பாடசாலையின் இன்றைய கீழ்நிலையை வைத்துக்கொண்டு அதன் வரலாற்றை மதிப்பிட முடியாது. யாழ் தமிழ் பெண்களுக்கு அறிவொளியூட்டியது இக்கல்லூரி என்பது இன்று அக்கல்லூரியில் உள்ள மாணவியருக்கு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

அடுத்த எட்டு ஆண்டுகளில் 200வது வருடத்தை நிறைவு செய்ய உள்ள உடுவில் மகளிர் கல்லூரி 1824இல் அமெரிக்கன் மிஷனரியினால் ஆரம்பிக்கப்பட்டு ஹரியட் உவின்சிலோ அம்மையார் அதன் அதிபராக நியமிக்கப்பட்டார். ஆசியாவிலேயே முதன்முதல் ஆரம்பிக்கப்பட் பெண்கள் விடுதிப் பாடசாலை இதுவாகும்.

அன்றைய பெண்களின் கல்வி அறிவு பற்றி கலாநிதி எஸ். ஜெபநேசன் இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும் (பக்கம் 30) என்ற நூலில் வருமாறு கோடிட்டு காட்டுகிறார்; “பல ஆண்டு காலமாகத் திண்ணைப் பள்ளிக் கூடங்களும் கோவிற்பற்றுப் பள்ளிக் கூடங்களும் இயங்கி வந்த போதிலும் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாவே இருந்தார்கள். 1816இல் யாழ்ப்பாணத்தில் பணிபுரிய வந்த பி.சி மைக்கஸ் அவர்கள் யாழ்ப்பாணம் முழுவதிலும் வாசிக்கத் தெரிந்த இரண்டு பெண்களையே கண்டதாக கடிதமொன்றிற் குறிப்பிட்டுகின்றார்.”

இவ்விடத்தில் இந்துக்கள் பெண்களின் கல்வி பற்றி என்ன கருதி இருந்தார்கள் என்பதை இந்துசாசனம் 1891 யூன் இதழ் வெளிப்படுத்தியுள்ளது: “பெண்களுடைய அற்பக் கல்வியினால் வரும் பல கேடுகளை நம்மவர் நன்கு அறிந்து அதிற் சிறிதும் விரும்பிலாராயினும் அயல்வீட்டுப் பெண் படித்து எழுத, வாசிக்கக் கூடியவளாக இருக்க நம்முடைய மகள் அவை அறியாதவளாய் இருப்பதென்னவென்று நம்மவர் ஒவ்வொருவராகத் தம் பெண்களைப் படிப்பிக்கத் தொடங்கினர்”.

உடுவில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பின் வெளியான இந்துசாசனம் பெண்களின் கல்வி அறிவு பற்றி எவ்வகையான ஒரு மதிப்பீட்டுடனே இருந்துள்ளது என்பதை மேலுள்ள குறிப்பு கோடிட்டுக் காட்டுகின்றது. அவ்வாறான ஒரு சூழலில் பெரும் போராட்டத்தின் மத்தியில் பெண்களுக்கு கல்வி அறிவு ஊட்டப்பட்டது. அவ்வாறான புரட்சிகரமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தலைமைத்துவப் பண்பு கொண்டவர்கள், தன்னலமற்ற சேவையை வழங்குபவர்கள் அக்கல்லூரிக்கு அதிபர்களாக இருந்தமையினாலேயே அக்கல்லூரியால் தமிழ் பெண்களினை பரம்பரை பரம்பரையாக அறிவார்ந்த சமூகமாக மாற்ற முடிந்தது.

உடுவில் பெண்கள் கல்லூரி இழந்த ஆளுமையை மீண்டும் பெற்று கல்வி நிலையில் கடை நிலைக்கு வந்துள்ள வடமாகாணத்துக்கு முன் மாதிரியான தலைமைத்துவத்தைக் காட்டி உடுவில் பெண்கள் கல்லூரியை அதன் வரலாற்றுச் சிறப்பு நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கு புதிய அதிபர் சுனிதா ஜெபரட்ணம் அவர்களாலும் நிர்வாகக் குழுவின் இயக்குநர் ஆயர் டானியல் தியாகராஜாவாலும் முடியுமா

மாணவர்களைப் பகடைக்காய்களாக மாற்றி தங்களுடைய அதிகார இழுபறிக்குள் இழுத்துவிடுவது மிகமோசமான கல்விக் கலாச்சாரம். இந்த உட்பூசலினால் ஏற்பட்டுள்ள அதிகார இழுபறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்கு  Wider Churches Ministries of the United Church of Christ (WCM-UCC)    விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின் குறிப்பு:
கிறிஸ்தவர்கள் என்று யேசுவை வழிபடுபவர்களை பொதுவில் அழைத்தபோதும் அவர்களிடையே வெவ்வேறு பிரிவினர் அடங்குகின்றனர். அவர்களினுள் பெரும்பான்மையினர் ரோமன் கத்தோலிக்கர்கள், ரோம் போப்பாண்டவரின் ஆண்டகைக்குக் கீழ்ப் பணிபவர்கள். இவர்கள் மேரி மாதா மாசற்று (உடலுறவின்றி) யேசுவை உப்பவித்ததாக நம்புகின்றனர். இவர்களிடம் மேரியை வணங்குவது பொதுவாகக் காணப்படும்.

உலகத்தை ஆளும் பிரித்தானியர்கள் இத்தாலியில் உள்ள ரோம் இன் போப்பின் கீழ்ப் பணிவதா என்று கத்தோலிக்க மார்க்கத்தை விமர்சித்து அதற்கு எதிராக போராடி நின்றவர்கள் –  Protest Strand – Protestant  8வது ஹென்ரி தனது மனைவியை விவாகரத்துச் செய்து தான் கொலை செய்த சகோதரனின் மனைவியை மணப்பதற்கு முயன்ற போது அதற்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்காததும் அதனால் 8வது ஹென்ரி கத்தோலிக்க மார்க்கத்திற்கு எதிரான நிலையை எடுத்தமை இப்பிளவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

புரட்டஸ்ரான்ற் எனப்து ஒரு மதம் அல்ல. கத்தோலிக்கத்திற்கு எதிர்நிலை என்றே கொள்ளப்பட வேண்டும். கத்தோலிக்க மார்க்கத்திற்கு எதிர்நிலை கொண்டவர்கள் மேரி மாதா மாசற்று யேசுவை உப்பவித்தார் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அத்தோடு மேரியை வழிபடுவதும் இல்லை. இவர்கள் மெதடிஸ்ற் – அமெரிக்க திருச்சபைக்கு கீழப்பணிபவர்கள், ஆங்கிலிக்கன் – கன்ரபரி திருச்சபைக்கு கீழ் பணிபவர்கள் மற்றும் பிற்பகுதிகளில் தோன்றிய இவான்ஜெலிக்கள் – தென்னிந்திய திருச்சபை – பரிசுத்த ஆவியை முன்னிலைப் படுத்துபவர்கள் என வகைப்படுகின்றனர். பல்வகைப்பட்ட இவான்ஜெலிக்கள் உண்டு

 

நன்றி  தேசம்நெற்

Facebook Comments