பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் – 2016.09.21 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் கிளிநொச்சி பொதுச்சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக ஆற்றிய உரை

 

கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றப்

புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை

மறுசீரமைத்தல் தொடர்பான பிரேரணைமீது உரையாற்ற வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி. இந்தச்

சந்தர்ப்பத்தில், கடந்த 16.09.2016 அன்று கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

தொடர்பான விடயங்களை இச்சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

1983ஆம் ஆண்டுக்கு முன் இலங்கையில் ஒரு பிரதானமான பொதுச் சந்தையாக கிளிநொச்சி

பொதுச் சந்தை விளங்கியது. தென்னிலங்கையிலிருந்தும் வடபகுதியின் கிழக்குப்

பகுதியிலிருந்தும் வருகின்ற மக்கள், மத்தியாக அமைந்திருக்கும் இந்தப் பெரிய சந்தையில்

பலதரப்பட்ட பொருட்களையும் கொள்வனவு செய்கின்ற நிலைமை காணப்பட்டது. 1983ஆம்

ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தைத் தொடர்ந்து அந்தச் சந்தை அமைப்பு

சீர்குலைந்துபோனதன் காரணமாகத் தம்புள்ள சந்தை அந்த இடத்தைப் பெற்றுக்கொண்டது.

யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல தடவைகள் ஏற்பட்ட இடம்பெயர்வுகளினால்

அந்த மக்கள் முழுமையாக பின்நகர்த்தப்பட்டபோதிலும், அவற்றையும் தாண்டி வியாபாரப்

பொருட்களையும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களையும் அந்தச் சந்தையிலே விற்பனை

செய்து சிறியளவில் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு தமிழர்கள்மீது திணிக்கப்பட்ட பாரிய யுத்தத்தினால் மக்கள்

இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால்வரை சென்று அங்கிருந்து வவுனியாவிலுள்ள முகாம்களுக்குள்

வாழ்ந்து, பின்னர் தமது இடங்களில் மீண்டும் குடியேறி வாழ்கின்றார்கள். அவர்கள் மீள்குடியேறிய

காலத்திலே அம்பாள்குளம் பகுதியில் இ்ந்தச் சந்தை அமைப்பு அப்போதைய அரசினால்

தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டது.

அதற்குப் பிற்பாடு அந்தச் சந்தை கிளிநொச்சி நகரப் பகுதியிலிருக்கின்ற டிப்போ சந்தியில்

ஏற்கெனவே இருந்த இடத்தில் மீன் சந்தைக்கான ஒரேயொரு கட்டிடத்தோடும் வெற்றிலை,

மரக்கறி போன்ற வியாபாரங்களுக்கான ஒரு கட்டிட அமைப்போடும் கிட்டத்தட்ட 220க்கு மேற்பட்ட

ஏனைய கடைகள் தற்காலிக கொட்டகைகளாக – தற்காலிக கடை அமைப்புகளைக் கொண்டதாக

பூரணமாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்திலிருந்து அங்குள்ள மக்கள் அவசர அவசரமாக அந்தக்

கடைகளில் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள்; அது அந்தக் காலத்தில் ஏற்பட்ட தேவையாகவும்

இருந்தது. ஆனால், அந்தக் கடைகள் அமைக்கப்படுகின்றபோது அக்காலத்தில் இருந்த அரசும்

அரசோடு இருந்த அரசின் காட்டுச் சட்டங்களைக் கையில் வைத்திருந்தவர்களும் கடைகளின்

சரியான அமைப்பு முறைக்கேற்ப தற்காலிகக் கடைகளை அமைக்கவில்லை. அத்துடன், மக்களால்

தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதேச சபை இருந்தும் அந்தச் சபையை மீறி அரசுடன் இருந்தவர்களுக்கு

கட்டாயப்படுத்தி அவற்றை வழங்கியதாலும் அவை சரியாகப் பேணப்படவில்லை என்பதுதான்

உண்மையானது.

அதனை வடக்கு மாகாண சபை பொறுப்பெடுத்த பின்னர் 70 மில்லியன் ரூபாய் செலவிலே 60

கடைகள் கொண்ட ஒரு தொகுதி இப்பொழுது அந்தப் பகுதிக்குள் அமைக்கப்பட்டுக்

கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 2016.09.16ஆம் திகதி இரவு 9.30

மணியளவில் அந்தச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அத்தீயானது கிட்டத்தட்ட 5

மணித்தியாலங்கள் பெரும் சுவாலையாக எரிந்தது. இதனால் 124க்கு மேற்பட்ட கடைகள் முற்றாக

எரிந்து நாசமாகியுள்ளன. அங்கு பழக்கடைகள் 22, புடவைக் கடைகள் 55, தையல் வியாபாரத்தில்

ஈடுபடுகின்ற கடைகள் 2, அழகுசாதன – fancy பொருட்கள் விற்பனை செய்கின்ற கடைகள் 44, தேநீர்க்

கடை 1 என மொத்தம் 124 கடைகள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளன. இவற்றின் மொத்தப்

பெறுமதி 22,17,97,200 ரூபாய் என கரைச்சி பிரதேச சபையினால் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட 230 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அந்த மக்கள்

இழந்திருக்கிறார்கள். அவர்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தத்தின்போது

உடுத்த உடுப்போடு அகதிகளாகச் சென்று மீண்டும் குடியேறி மெல்ல மெல்லத் தங்கள்

வியாபாரத்தினை ஆரம்பிக்கின்றபொழுது இந்த எதிர்பாராத அனர்த்தம் அவர்களை மீண்டும் ஒரு

பாரிய படுகுழிக்குள் தள்ளியிருக்கின்றது.

இதுதொடர்பாக நான் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு

புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சர், மாண்புமிகு உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,

மாண்புமிகு நிதி அமைச்சர் ஆகியோருக்கும் எழுத்துமூலமான கடிதங்களை

அனுப்பியிருக்கின்றேன். தயவுசெய்து அனைவரும் இரக்கத்தோடும் மிக வேகமாகச்

செயற்படுத்தக்கூடிய வகையிலும் இதனை அணுகவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர்களுக்கான ஒரு நிவாரண உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்தக்

கடைகளை ஆரம்பித்துத் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை

மேற்கொள்ள வேண்டும்.

நேற்றைய தினம் நான் நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசியபொழுது இது சம்பந்தமாகக்

குறிப்பிட்டேன். அவர்கள் வங்கிகளிலே கடன் பெற்றிருக்கின்றார்கள். இலங்கை வங்கி, மக்கள்

வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி இதனைவிட

கொமர்ஷல் கிறடிற், ஏசியா கிறடிற் போன்றவற்றிலே கடன்களைப் பெற்று இந்தக் கடைகளை

நடத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு காப்புறுதி கிடைக்கவில்லை.

அவர்களுடைய கடைகள் தற்காலிகக் கடைகள் என்ற காரணத்தால் அவர்களுக்குக் காப்புறுதிகள்

எதுவும் வழங்கப்படவில்லை. வங்கிகள் தற்காலிகக் கடைகளுக்குக் கடன் வழங்கியிருக்கின்றன.

ஆனால், காப்புறுதி நிறுவனம் தற்காலிகக் கடை எனக் கூறி அவர்களுக்குக் காப்புறுதியைச் செய்ய

முன்வரவில்லை. இதனால் அவர்கள் காப்புறுதிகூட இல்லாத நிலைமைக்குத்

தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை.

அனர்த்தம் காரணமாக இந்த நாட்டிலே பல இடங்களில் பலவிதமான பிரச்சினைகள்!

மலையகத்திலே ஏற்பட்ட மண் சரிவுகள், சாலாவயில் ஏற்பட்ட வெடிகுண்டுப் பிரச்சினைகள்போல

கிளிநொச்சியிலே ஏற்பட்ட இந்த 124 கடைகளுக்குமான அழிவு ஒரு பயங்கர அனர்த்தமாக இந்த

நாட்டிலே பார்க்கப்பட வேண்டும். அதனால்தான் இவர்களுக்குரிய உதவிக்கான வேண்டுகோளை

இந்த உயர்ந்த சபையினூடாக நான் முன்வைக்கின்றேன். இங்கே இப்பொழுது மீள்குடியேற்றம்

மற்றும் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சர் அவர்களும் இருக்கின்றார். அவரும் இதில்

கூடுதலான கவனமெடுப்பார் என்று நான் கருதுகின்றேன். இதனைவிட நாட்டினுடைய இந்த

உயர்ந்த சபையின் ஊடாக ஒவ்வோர் அமைச்சரும் மற்றும் இந்தத் துறைசார்ந்தவர்களும்

இதனோடு தொடர்புடையவர்களும் இதற்கு வேகமாக உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய

மிக முக்கியமான வேண்டுகோள்.

இந்த இடத்திலே இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது, கிளிநொச்சி ஒரு தனி

மாவட்டமாக இருந்தும் அந்த மாவட்டத்திலே ஒரு நகர சபையோ மாநகர சபையோ இல்லை என்ற

காரணத்தினால் அங்கு ஒரு fire brigade – தீயணைப்புப் படைப் பிரிவு இல்லை. இந்தத் தீயினால்

ஏற்பட்ட அழிவுக்கு இது ஒரு மிக முக்கியமான காரணமாகக் கொள்ளப்படுகின்றது. அங்கு ஒரு

தீயணைப்புப் படை இருந்திருந்தால் இந்த அழிவைப் பெருமளவில் தடுத்திருக்க முடியும்.

யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு

இயந்திரங்கள் அந்த ஊழியர்களோடு அங்கு வருகைதந்து அந்தத் தீயை அணைக்கும்வரை

அங்குள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதேச சபை போன்றவற்றின் சாதாரண 'பவுசர்'கள்

மூலமாகவே தண்ணீர் பீய்ச்சித் தீயை அணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்

அது பெரிய அளவிலே வெற்றியைக் கொடுக்கவில்லை. அந்த இடத்திலே ஒரு தீயணைப்புப் படை

இருந்தால்தான் அதனை வெகுவேகமாக அணைத்திருக்க முடியும். இனியாவது காலம்

தாழ்த்தாமல் இதனை அங்கு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளிநொச்சியிலுள்ள கரைச்சி பிரதேச சபையை கிளிநொச்சி நகர சபையாகத்

தரமுயர்த்துவதற்கான வேண்டுகோள் 2013ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பினரால் அரசிடம் முன்வைக்கப்பட்டது. இது கிளிநொச்சிக்கு மிக முக்கியமான

தேவையும்கூட. ஆகவே, இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்தாவது கிளிநொச்சிக்கான ஒரு

தீயணைப்புப் படைப் பிரிவு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய மிக

முக்கியமான கோரிக்கையாகும்.

இதனைவிட, இங்கே நான் குறிப்பிட்டதுபோல, பாதிக்கப்பட்ட இந்த 124 கடை உரிமையாளர்களும்

வங்கிகளிலே கடனைப் பெற்றிருக்கின்றார்கள். Credit அடிப்படையிலே – கடன் அடிப்படையிலே

மட்டுமல்லாமல் நாள் வட்டிக்குக்கூட அவர்கள் கடனைப் பெற்றிருக்கின்றார்கள். இந்த

வங்கிகளோடு அரசாங்கம் இது சம்பந்தமாகப் பேசவேண்டும். நிதியமைச்சர், மீள்குடியேற்ற

அமைச்சர் ஆகியோர் இந்த வங்கிகளோடு தொடர்பை ஏற்படுத்தி, 6 மாத காலத்திற்கு இவர்களது

கடன்களுக்கு வட்டியை இல்லாமற் செய்வதற்கும் கடன் அறவீடுகளை நிறுத்துவதற்கும் இவர்கள்

தங்களது தொழிலை ஆரம்பித்து இயங்கத் தொடங்கிய பிற்பாடு 6 மாத கால இடைவெளியை

வழங்குவதற்கும் உதவி செய்யவேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.

அதனைவிட அவர்கள் அந்தச் சந்தையிலே தங்களது கடைகளுக்கு மின்சாரக் கட்டணம்

கட்டியிருக்கின்றார்கள்; மின்சார ஒழுக்குக்கூட இதற்குக் காரணமாக இருக்குமா என்று

ஆராயப்படுகின்றது. நாளாந்தம் அவர்கள் பிரதேச சபைக்கு வரி கட்டியிருக்கின்றார்கள். இவர்கள்

இவ்வாறெல்லாம் செய்தும்கூட ஒரு காப்புறுதியையோ அதற்கான ஒரு compensation –

நட்டஈட்டையோ பெறமுடியாமல் இருக்கிறார்களென்றால், இது ஒரு பாரிய இழப்பாகவே

பார்க்கப்படுகின்றது. ஆகவே, கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சியிலே ஏற்பட்ட அனர்த்தம்

ஒட்டுமொத்தத்திலே பல பேருடைய இதயங்களைப் பிழிந்த ஒரு விடயம். யுத்தத்திலே அவர்கள்

தங்களுடைய சொத்துக்களை இழந்திருக்கின்றார்கள்; தங்களுடைய குடும்ப அங்கத்தவர்களை

இழந்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய முழுச் சொத்துக்களையும் வியாபாரப்

பொருட்களையும் இழந்துதான் மீண்டும் வந்து குடியேறி இந்த இடத்திலே அவர்கள் வியாபாரத்தை

ஆரம்பித்தார்கள். நான் அந்த இரவு நேரம் அந்த இடத்திற்குச் சென்றபோது பல பெண்கள்

கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்கள். பலர் அந்த எரிகின்ற கடைகளுக்குள் விழுந்து தற்கொலை

செய்வதற்குக்கூட முயற்சித்தார்கள். அவ்வாறு மிகவும் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையைக்

கருத்திலெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை என்னுடைய அவசர

வேண்டுகோளாக இன்றைய தினத்திலே இந்த உயர்ந்த சபையினூடாக நான் முன்வைக்கின்றேன்.

எனக்கு ஒதுக்கிய மிகுதி நேரத்தை எனக்குப் பின்னால் பேச இருக்கின்ற என்னுடைய கட்சி

சார்ந்தவர்களுக்கு வழங்குமாறு கேட்டு, எனது உரையை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

Facebook Comments